2021ம் ஆண்டு நடக்கவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. உலக நாயகன் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுகுறித்து கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் அக்டோபர் 16 அன்று காலை 11:00 மணியளவில் சென்னை பாண்டி பஜார் தியாகராயர் ரோடு ஜிஆர்டி ஹோட்டலில் கட்சித்தலைவர் நம்மவர் தலைமையில் நடைபெறவுள்ளது.
கூட்டத்தில் வரப்போகும் 2021 சட்டமன்ற தேர்தல் குறித்தான கட்சியின் செயற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளது தொடர்ந்து சட்டமன்றத் தேர்தல் தொடர்பான முடிவுகளும் எடுக்கப்பட விருக்கின்றது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஏற்கனவே நடந்த தமிழக இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டது. அதன்பிறகு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. இந்நிலையில் வரும் 2021ம் ஆண்டு நடக்கவுள்ள தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக எல்லா கட்சிகளுக்கும் அமைந்துள்ளன. ரஜினிகாந்த்தும் ஏற்கனவே 2021ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிடுவேன் என்று இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிவித்தார்.
அதற்காக தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி அமைத்து உறுப்பினர்கள் சேர்க்கை நடத்தி நிர்வாகிகள் முதல் பூத் ஏஜெண்ட் வரை நியமித்து வைத்திருக்கிறார். ஆனால் இன்னும் புதிய கட்சி தொடங்கவில்லை. தனது பிறந்த தினத்தன்று ரஜினி கட்சி தொடங்கலாம் என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, தேமுதிக. சமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக. கம்யூனிஸ்ட் கட்சிகள் என எல்லா கட்சிகளும் தங்களின் தேர்தல் பணிகளை தொடங்கி செயல்பட்டு வருகின்றன.