புதிய கொரோனா பாதிப்பு 3வது நாளாக குறைகிறது.. பலி எண்ணிக்கையும் சரிவு..

corona cases come down in tamilnadu for 3rd day.

by எஸ். எம். கணபதி, Oct 15, 2020, 09:35 AM IST

தமிழகத்தில் புதிதாக கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை 3வது நாளாகக் குறைந்துள்ளது. பலி எண்ணிக்கையும் 52 ஆகக் குறைந்திருக்கிறது.இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில்தான் கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. தமிழகத்தில் கடந்த ஜூலை 22ம் தேதி முதல் தினமும் புதிதாக 5 ஆயிரம் பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டது. ஆகஸ்ட் இறுதியில் இது 7 ஆயிரம் வரை உயர்ந்தது.

தற்போது படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. அதிலிருந்து மூன்றாவது நாளாக நேற்றும் புதிய பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 4462 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 70,392 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.

அதே சமயம், தொற்றில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5083 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 17,403 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 52 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,423 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 42 ஆயிரத்து 566 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று புதிதாக 1130 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 272 பேருக்கும், திருவள்ளூர் 207, காஞ்சிபுரம் 148, கோவையில் 389, ஈரோடு 127, திருப்பூர் 168, நீலகிரி 98, நாமக்கல் 108, சேலம் 274, தஞ்சாவூர் 99, கடலூர் 109, வேலூர் மாவட்டத்தில் 112 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 85,573 பேருக்கும், செங்கல்பட்டில் 40,148 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 35,342 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தாலும் பலி எண்ணிக்கை தமிழகத்தை விடக் குறைவாகவே உள்ளது. தமிழகத்தில்தான் கொரோனா பலி 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

More Tamilnadu News

அதிகம் படித்தவை