டெல்லி, மகாராஷ்டிரா உள்படப் பல மாநிலங்களில் தீபாவளி வரை பள்ளிகள் திறக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பள்ளிகள் இப்போது திறக்கப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா பரவல் சற்று குறைந்து விட்டாலும், மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறையவில்லை. தமிழகத்தில் புதிதாகப் பாதிப்பவர்கள் எண்ணிக்கை கடந்த 3 நாட்களாகத்தான் 5 ஆயிரத்துக்குக் கீழ் குறைந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த மாதம் 21ம் தேதி முதல் பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உரிய விதிமுறைகளை பின்பற்றித் திறக்கலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதன்படி சில மாநிலங்களில் பள்ளிகளில் சில வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எனினும், டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதிக்குப் பிறகு பள்ளிகள் திறப்பது பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, மேற்குவங்கத்தில் தீபாவளி வரை பள்ளிகள் திறப்பு இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், பஞ்சாப்பில் இன்று(அக்.15) முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன. ஒரு வகுப்பில் 20 மாணவர்கள்தான் அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து கட்டுப்பாடுகளும் பின்பற்றப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர் விஜய் இந்தர்சிங்லா தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பு குறித்து இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காட்பாடியில் நடந்த அரசு நிகழ்ச்சிக்கு வந்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், பள்ளிகள் திறப்பு குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாது. ஏனென்றால் ஆந்திராவில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் 26 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சில உயிர் பலியும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் எப்போது தொற்று குறைகிறதோ அப்போது தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்க முடியும். இது குறித்து முறையாக முதலமைச்சர் அறிவிப்பார் என்று தெரிவித்தார்.