தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அதிக கட்டணம் வசூலித்த 9 மருத்துவமனைகளில் மருத்துவ சேவைக்கு இயக்குநரகம் தடை விதித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட போதிலும் சில தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த மருத்துவமனைகளில் வசூலிக்கப்பட்ட வேண்டிய கட்டணம் குறித்துக் கடந்த ஜூன் மாதம் மாநில சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டது.
அதன்படி முதலமைச்சரின் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் பயனாளிகள் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால் அவர்களிடம் ஒரு நாளைக்கு ரூ 5,000 முதல் ரூ.15,000 வரை வசூலிக்கலாம். நோயாளி பொது வார்டில் அல்லது அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாரா, வென்டிலேட்டரில் வைக்கப்பட்டாரா என்பதைப் பொறுத்து மருத்துவமனைகளே கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்.
பயனாளிகள் அல்லாதவர்களுக்கு ஏ 1 மற்றும் ஏ 2 கிரேடு மருத்துவமனைகளில் ஒரு நாளைக்கு ரூ. 7,500 ரூபாயும், ஏ3 முதல் ஏ 6 மருத்துவமனைகளுக்கு ஒரு நாளைக்கு ரூ. 5000 வசூலிக்கலாம். தீவிர சிகிச்சைக்கு ரூ.15,000 வரை வசூலிக்கலாம் என சுகாதாரத்துறை அறிவித்தது. எனினும் பல மருத்துவ மனைகளில் அரசால் பரிந்துரைக்கப்பட்ட கட்டணத்தை விட நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. இது குறித்து மருத்துவ சேவை இயக்குநரகம் விசாரணை நடத்தி அதிக கட்டணம் வசூலித்த மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்கத் தடை விதித்தது.
இதன்படி கடந்த இரு மாதங்களில் 9 மருத்துவமனைகளுக்கு இந்த தடை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர நோயாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட்ட அதிகப்படியான பணத்தைத் திருப்பிச் செலுத்தும்படி மேலும் பதினெட்டு மருத்துவமனைகளுக்கு மருத்துவ சேவை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
கீழ்பாக்கத்தில் உள்ள பெவெல் மருத்துவமனை, அரும்பாக்கத்தில் உள்ள அப்பாசாமி மருத்துவமனைகள், தாம்பரத்தில் உள்ள இந்து மிஷன் மருத்துவமனை, திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவமனை, விருதுநகரில் உள்ள சிட்டி மருத்துவமனை, சேலத்தில் உள்ள பிரியம் மருத்துவமனை, கோவை ஸ்ரீ லட்சுமி மருத்துவ மையம், தூத்துக்குடி சிட்டி மருத்துவமனை மற்றும் ராணிப்பேட்டில் உள்ள ஸ்கடர் மெமோரியல் மருத்துவமனை ஆகிய 9 மருத்துவமனைகளுக்கு சிகிச்சை அளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ சேவை இயக்குனர் டாக்டர் எஸ். குருநாதன் இது குறித்துக் கூறுகையில்
நோயாளிகள் அல்லது அவர்களது குடும்பத்தினரிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டோம். விசாரணை நடத்திய மருத்துவமனைகளில் பெரும்பாலானவை அதிக கட்டணம் வசூலிப்பது ஊர்ஜிதமானது. இதையடுத்து அந்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்றார்.