தமிழகத்தில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை நேற்று 4285 ஆக குறைந்துள்ளது. பலியும் 57 ஆக குறைந்திருக்கிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைபவர்களின் எண்ணிக்கை, புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகி வருகிறது. இதனால், கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் மட்டுமே பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் இறுதியில் புதிதாக பாதிப்பவர் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. கடந்த 10 நாட்களாக புதிதாக தொற்று பாதிப்பவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. நேற்று 4285 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாநிலம் முழுவதும் இது வரை 6 லட்சத்து 83,486 பேருக்கு தொற்று பாதித்திருக்கிறது.
கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 5005 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 32,709 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய் பாதிப்பால் நேற்று 57 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,586 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 40,192 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று புதிதாக 1132 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 231 பேருக்கும், திருவள்ளூர் 218, காஞ்சிபுரம் 148, கோவையில் 389, ஈரோடு 122, திருப்பூர் 159, நாமக்கல் 131, சேலம் 240, கடலூர் 113, தஞ்சாவூர் மாவட்டத்தில் 191 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 88,944 பேருக்கும், செங்கல்பட்டில் 40,955 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 35,889 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது. மாநிலம் முழுவதும் 88,574 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. இது வரை மொத்தத்தில் 86 லட்சத்து 7812 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைகள் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாக தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.