வேலையிழந்து விரக்தியின் விளிம்பில் இளைஞர்கள்.. எடப்பாடிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை.

M.K.Stalin ask Edappadi palanisamy to create employment schemes.

by எஸ். எம். கணபதி, Oct 18, 2020, 12:40 PM IST

வேலை இழந்து, விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், ஆக்கபூர்வமான வேலை வாய்ப்புத் திட்டங்களை முதலமைச்சர் பழனிசாமி உருவாக்க வேண்டுமென்று மு.க.ஸ்டாலில் வலியுறுத்தியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை வருமாறு:
நகர்ப்புறங்களிலும், கிராமப்புறங்களிலும் உள்ள இளைஞர்களும் - ஏழை எளிய, நடுத்தர மக்களும் வேலை இழப்பு, வருமான இழப்பு என்ற இரட்டிப்புக் கொடுமைகளில் சிக்கி – தினமும் இன்னல்களினால் திணறிக் கொண்டிருப்பதை முதலமைச்சர் பழனிசாமி இதுவரை கண்டுகொள்ளாமல் இருப்பது பெரிய தவறு. ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு விதத்தில் வேலை இழப்பு நேர்ந்து - தங்களின் குடும்ப வருமானத்தை இழந்து விட்டு - கொரானோ நோய்த் தொற்றின் அச்சத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைச் சமாளிக்கவே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 ரூபாய் ரொக்கமாகக் கொடுத்து உதவிட வேண்டும் என்று பல முறை வலியுறுத்தியும் - அதை எடப்பாடி அ.தி.மு.க. அரசு ஏற்க மறுத்து - வழக்கமாக “கமிஷன்” அடிக்க உதவும் டெண்டர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது.


தமிழ்நாட்டில், கொரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்கப் பரிந்துரைகளை அளிக்குமாறு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழுவினை அ.தி.மு.க. அரசு அமைத்தது. 250 பக்கங்கள் கொண்ட அறிக்கையை அந்தக்குழு முதலமைச்சரிடம் அளித்து ஒரு மாதத்தை நெருங்கி விட்டது. ஆனால் அந்த அறிக்கையை, மக்கள் அறிந்து கொள்ள ஏதுவாக, வெளியிடவும் இல்லை; பரிந்துரைகள் மீது நடவடிக்கையும் எடுக்கவில்லை. அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்த போது, “கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்புத் திட்டங்கள் போல் - எடுத்துக்காட்டாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போல், நகர்ப்புறங்களில் ஒரு வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்கிட வேண்டும்” என்று பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அப்படி எந்த ஒரு திட்டத்தையும் நகர்ப்புறத்திற்காக இதுவரை அ.தி.மு.க. அரசு அறிவிக்கவில்லை.

முதலமைச்சரிடம் அறிக்கையை அளித்து விட்டு, பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன், “விரைவில் தமிழகம் ஊரடங்கிலிருந்து வெளிவருவதுதான் தமிழகப் பொருளாதாரத்திற்கு நல்லது” என்றும்; “தமிழகப் பொருளாதாரம் இரண்டு மாதங்களில் மீளும்” என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அப்படி அவர் கூறி ஒரு மாதத்தைக் கடக்கப் போகும் இந்த நேரத்தில் கூட, கொரோனா ஊரடங்கிலிருந்து முற்றிலும் தமிழ்நாடு வெளியே வருவதற்கான சூழல்களை எடப்பாடி அ.தி.மு.க. அரசு உருவாக்கவில்லை. அதற்குப் பதில் தினமும் கொரோனா நோய்த் தொற்றுத் தொடருகிறது. பொருளாதாரத் தேக்க நிலைமையும் - வருமானம் இழப்பு, வேலை இழப்பு ஆகிய துன்பம் தொடருகிறது. இத்துறைகளில் அரசின் தோல்வியைத் திசைதிருப்ப – வந்த உண்மையான முதலீடுகள் எவ்வளவு என்பது குறித்து எதையும் சொல்லாமல் - புரிந்துணர்வு ஒப்பந்த விளம்பரங்கள் மட்டும் வெளியிடப்படுகிறது. “இதோ முதலீடு வருகிறது.

இதோ தொழில்கள் துவங்கப் போகிறது. இதோ வேலைவாய்ப்பு வரப் போகிறது” என்று கடந்த பத்து ஆண்டுகளாக சொன்ன அம்புலி மாமா கதையையே திரும்பத் திரும்ப அ.தி.மு.க. அரசு கூறி ஏமாற்றி வருகிறது. அதிலும் குறிப்பாக, இந்த நான்கு ஆண்டுகளாக முதலமைச்சர் பழனிசாமி தமிழக மக்களிடம் “புரிந்துணர்வு ஒப்பந்தம்” என்று மட்டும் கூறியே காலத்தைக் கடத்தி வருகிறார்! மந்திரத்தால் மாங்காய் விழுந்துவிடாது என்பதை உணர வேண்டும். ஆகவே இனியும் இதுபோன்ற “திசைதிருப்பும்” வேலைகளில் ஈடுபட்டு - வேலைவாய்ப்பை இழந்து நிற்கும் தமிழக இளைஞர்களை ஏமாற்றாமல் - கிராமப்புறத்தில் உள்ள வேலை வாய்ப்புகளைப் பெருக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதேபோல் நகர்ப்புறத்தில் வேலை வாய்ப்பை உருவாக்கிட, பிரத்தியேகமாக ஒரு “நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை” அறிவிக்குமாறு முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன். வேலை இழந்து, விரக்தியின் விளிம்பில் நிற்கும் இளைஞர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், ஆக்கபூர்வமான வேலை வாய்ப்புத் திட்டங்களை, தேவையான அளவுக்கு, கிராமங்களிலும், நகரங்களிலும் ஏற்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் எடுத்திட வேண்டும் என்று முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். “சாலை ஓரத்திலே வேலை அற்றவர்கள்; வேலை அற்றவர்களின் மனதிலே விபரீதமான எண்ணங்கள்; இதுதான் காலத்தின் குறி!” என்று அண்ணா அன்றே சொன்னதை மறந்துவிடக் கூடாது. இவ்வாறு ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

You'r reading வேலையிழந்து விரக்தியின் விளிம்பில் இளைஞர்கள்.. எடப்பாடிக்கு ஸ்டாலின் எச்சரிக்கை. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை