விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சனாதன தர்மம் குறித்து பேசியவர், ``சனாதன கொள்கைகளில், பெண்கள் அடிப்படையில் கடவுளால் பரத்தையர்களாக படைக்கப்பட்டவர்கள். இந்து தர்மப்படி அனைத்து பெண்களும் விபச்சாரிகளாக படைக்கப்பட்டவர்கள். ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள். இது பிராமணப் பெண்களுக்கும், சாதாரண அடிமட்டப்பெண்களுக்கும் பொறுந்தும். எல்லாப்பெண்களுக்கும் தீட்டு உண்டு" என்று பேசியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
குறிப்பாக பாஜக திருமாவளவனை கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கிடையே, ``எனது பேச்சை திரித்து, பொய்யைப் பரப்புகிறது ஒரு கும்பல். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்மீது அவதூறு பரப்புகிறார்கள். காலங்காலமாக பெண்களை இழிவுபடுத்துவது மனுதர்மம் என்னும் சனாதனமே" என்று விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், மனுதர்மத்தை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கையுடன், போராட்டத்தை அறிவித்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி.