எடப்பாடிக்கு எடுபிடி எதற்கு? ஸ்பெஷல் டிஜிபி நியமனத்திற்கு துரைமுருகன் கண்டனம்...!

Appointment of Special DGP : DMK general secretary Thuraimurugan condemned .

by Balaji, Oct 26, 2020, 09:39 AM IST

தமிழகக் காவல்துறையில் இதுவரை இல்லாத நடைமுறையாக ஸ்பெஷல் டிஜிபி என்ற பணியிடத்தை ஏற்படுத்தி அதன்மூலம் விபரீத விளையாட்டுக்கு முதலமைச்சர் வித்திட்டுள்ளார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஸ்பெஷல் டிஜிபி.யாக ராஜேஷ் தாஸ் நியமனம் ஒரு விபரீத விளையாட்டு என்று பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ் க்குப் பதவி உயர்வு அளித்து சட்டம் ஒழுங்கு ஸ்பெஷல் டி.ஜி.பி.யாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நியமித்திருக்கிறார். இது உச்சநீதிமன்றத்தால் “பிரகாஷ் சிங்” வழக்கில் வழங்கப்பட்ட 7 கட்டளைகளுக்கும், தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013-க்கும் முற்றிலும் எதிரானதாகும். தமிழகத்தில் ஏற்கனவே சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக திரிபாதி இரண்டு ஆண்டுகளுக்கு (ஜூன் 2021 வரை), பிரகாஷ் சிங் வழக்கின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது, அவரது அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், தேர்தல் காலப் பணிகளில் “எடப்பாடிக்கு” எடுபிடியாக இருக்க வேண்டும் என்பதற்காக போலீஸ் தலைமையகத்தில் இன்னொரு டி.ஜி.பி. அந்தஸ்துள்ள அதிகாரியைச் சட்டம் ஒழுங்குப் பணிகளில் நியமித்திருப்பது, ஒட்டு மொத்த காவல்துறை நிர்வாகத்தையே சீரழிக்கும் மிக மோசமான முன்னுதாரணம் ஆகும். “இரட்டைத் தலைமையால்” அ.தி.மு.க.விற்குள் நடக்கும் கூத்துகள், டி.ஜி.பி. அலுவலகத்திலும் அரங்கேறட்டும். நாமும் ஓ.பி.எஸ்ஸும் அடித்துக் கொள்வது போல் அங்கும் அதிகாரிகளுக்குள் அடித்துக் கொள்ளட்டும் என்ற விபரீத விளையாட்டு தமிழகக் காவல்துறையின் தலைமைப் பண்பை அடியோடு நாசப்படுத்தி விடும் என்று எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இரண்டு டி.ஜி.பி.களுக்கு என்னென்ன பொறுப்பு? தமிழ்நாட்டில் உள்ள காவல்துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருக்கும் தமிழ்நாடு காவல்துறைத் தலைமை இயக்குநருக்குக் கட்டுப்பட வேண்டுமா? அல்லது அதே தகுதியில் டி.ஜி.பி.யாக இருக்கும் “ஸ்பெஷல் டி.ஜி.பி.க்கு”கட்டுப்பட வேண்டுமா? ஆகவே “ஒருங்கிணைப்பாளர்”, “இணை ஒருங்கிணைப்பாளர்” என்று அ.தி.மு.க.விற்குள் உருவாக்கியது போல், காவல்துறையில் “டி.ஜி.பி.” “ஸ்பெஷல் டி.ஜி.பி” என்று உருவாக்கியுள்ளதைத் திரும்பப் பெற்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை மதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை