தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.. சிகிச்சையில் 29 ஆயிரம் பேர்..

by எஸ். எம். கணபதி, Oct 27, 2020, 09:43 AM IST

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்துக்கும் கீழே சென்றது. நேற்று புதிதாக 2708 பேருக்கு மட்டுமே தொற்று பாதித்திருக்கிறது.தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தினமும் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைத் தாண்டியது. சில நாட்களுக்கு இந்த எண்ணிக்கை நீடித்து வந்தது. செப்டம்பர் முதல் வாரத்தில் இது படிப்படியாகக் குறைந்து, கடந்த அக்.12ம் தேதி முதல் முறையாக 5 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது.

இதன்பின் தொடர்ந்து புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 2708 பேருக்கு மட்டுமே புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டது. இத்துடன் சேர்த்து மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 11,713 பேராக அதிகரித்துள்ளது.

கொரோனா மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 4014 பேரையும் சேர்த்து, இது வரை 6 லட்சத்து 71,489 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 32 பேர் பலியானார்கள். மொத்தத்தில் இது வரை 10,956 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 29,268 பேர் சிகிச்சையில் உள்ளனர்.சென்னையில் நேற்று புதிதாக 747 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 143 பேர், காஞ்சிபுரம் 119, திருவள்ளூர் 133, கோவையில் 253, சேலம் 165, திருப்பூர் மாவட்டத்தில் 109 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்த 7 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் நூற்றுக்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிலும், ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை உள்பட ஆறேழு மாவட்டங்களில்தான் 50க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று பாதிக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களில் அதற்கும் குறைவானவர்களுக்கே தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் இது வரை ஒரு லட்சத்து 96,378 பேருக்கும், செங்கல்பட்டில் 42,801 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 37,269 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25,182 பேருக்கும் தொற்று பாதித்திருக்கிறது.

மாநிலம் முழுவதும் இது வரை சுமார் 95 லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாகத் தொற்று பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 70 ஆயிரம் பேருக்குப் பரிசோதனை செய்ததில் 3 ஆயிரத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டது.

You'r reading தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.. சிகிச்சையில் 29 ஆயிரம் பேர்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை