கொரோனா சூழல் காரணமாகக் கல்லூரி மாணவர்களில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் தவிர்த்து அனைவரையும் தேர்ச்சி செய்ய யுஜிசி மற்றும் ஏஐசிடியி பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தற்பொழுது மீண்டும் இறுதியாண்டு மாணவர்களைத் தவிர்த்து மற்ற மாணவர்கள் அரியர் தேர்வுக்குக் கட்டணம் கட்டியிருந்தால் தேர்விலிருந்து விலக்கு என்ற அறிவிப்பை நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதை உயர்கல்வி அமைச்சர் அன்பழகனும் உறுதிப்படுத்தியிருந்தார்.
ஆனால் இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட அண்ணா யூனிவர்சிட்டி மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. அப்போது, யுஜிசி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ``கட்டாயமாக இறுதியாண்டு தேர்வு நடத்தப்பட வேண்டும். கல்லூரிகள் வேண்டுமானால் கால அவகாசம் கோரலாம்" என்று கூறப்பட்டிருந்து. ஆனால் அதே மனுவில், அரியர் தேர்வுகள் குறித்த எந்த தகவலும் இடம் பெறவில்லை.
இதையடுத்து யுஜிசிக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்ததோடு, ``இறுதி பருவத் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடியும் போது, அரியர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த முடியாதது ஏன்?" எனக் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அப்போது, ``அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை" என யுஜிசி தெரிவிக்க, உடனே அரியர் தேர்வு தொடர்பாக தமிழக உயர்கல்வி துறையும், யுஜிசி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என கூறி நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.