முத்துராமலிங்கத் தேவர் 113வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். செல்லூர் ராஜூ உள்பட அமைச்சர்களும் மாலை அணிவித்தனர்.இதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்குச் சென்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.பின்னர், நிருபர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தேவையான வசதிகளை அதிமுக அரசு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அதே போல், ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம். மீனவர்களுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் தராமல், கவர்னர் தாமதித்து வருகிறார்.
அதனால், 7.5 சதவீத உள்ஒதுக்கீடுக்கு ந அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த மசோதா விவகாரத்தில் சிலர் செய்யும் அரசியல் எடுபடாது.இவ்வாறு பழனிசாமி தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக மூத்த நிர்வாகிகள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட பலரும் வந்து மரியாதை செலுத்தினர்.பின்னர், மு.க.ஸ்டாலின் பசும்பொன்னுக்குச் சென்றார். அவருடன் மூத்த நிர்வாகிகளும் சென்றனர். அங்கு முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகளும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.