ரஜினிகாந்த் எழுதிய கடிதம் என்று ஒரு பதிவு சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் அரசியலுக்கு வருவது குறித்த நிலைப்பாட்டை உறுதியாகத் தெரிவிக்கவில்லை என்ற போதிலும் தனது உடல்நிலை காரணமாக மருத்துவர்கள் தெரிவித்த சில ஆலோசனைகளை என்று சில வரிகள் இடம்பெற்றிருந்தன.இந்த நிலையில் அந்த அறிக்கை தனது அறிக்கை அல்ல என்று சொன்ன ரஜினிகாந்த் அதில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் உண்மை என்று சொல்லி மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தினார்.
இது குறித்து அவர், எனது அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் மருத்துவர்கள் எனக்கு அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றித் தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன். என்று டிவிட்டர் மூலம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சில நகரங்களில், தமிழக மக்களின் ஒரே நம்பிக்கை ..கடைசி நம்பிக்கை.. நீங்கள் மட்டும் தான் தலைவா.. ஓட்டுன்னு போட்டா தலைவர் ரஜினிக்குத் தான் வா தலைவா வா.. என்ற ரீதியில் ரஜினியை அரசியலுக்கு இழுக்கும் வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
யார் இந்த போஸ்டரை தயாரித்தது என்ற விவரங்கள் அதில் இல்லை மேலும் எந்த அச்சகத்தில் அச்சிடப்பட்டது என்ற விவரம் அதில் குறிப்பிடவில்லை. பொதுவாக இது போன்ற போஸ்டர்களை தயாரிப்பவர்கள் தங்களது பெயரைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்றும் அச்சிடப்படும் அச்சகத்தின் பெயர் விபரங்கள் அதில் குறிப்பிட வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் அந்த விவரங்கள் எதுவுமே இல்லாமல் இப்படி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது சர்ச்சையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் இது பற்றி தங்களுக்குச் சத்தியமாக எதுவும் தெரியாது என்று கை விரிக்கிறார்கள்.
இதுபற்றி நடுநிலையான அரசியல் விமர்சகர்கள் சிலர் கூறுகையில், ரஜினி எந்த ஒரு காரியத்திலும் அவ்வளவு எளிதில் நிறைவு விடமாட்டார் இறங்கி விடமாட்டார்.அவரது டிவிட்டர் பதிவைப் பார்க்கும் போது அரசியலுக்கு வரக் கூடிய ஆசை உள்ளுக்குள் இருந்தாலும் உடல்நிலை ஒத்துழைக்க வேண்டுமே என்ற சந்தேகம் அவருக்கு இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.எனினும் இப்படி முக்கிய நகரங்களில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்கள் மூலம் அவரே ஆழம் பார்க்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. காரணம் இது அவரது ரசிகர் மன்றத்தினரால் ஒட்டப்படவில்லை.மாறாக மாற்றத்தை விரும்பும் பொது ஜனங்களின் ஆதங்கம் போல் தெரிகிறது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.