கோழிகளை வளர்க்க சிக்கன் விற்பனை நிறுவனங்கள் தரும் கூலி மிகக் குறைவாக இருக்கிறது இதை அதிகரித்து தரவேண்டுமென்று கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திடீர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக சிக்கன் சப்ளையில் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது. தமிழகத்தில் பல தனியார் பிராய்லர் கோழி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்கள் கோழிப் பண்ணையாளர்களிடம் பிறந்து ஒரு நாளே ஆன கோழிக் குஞ்சுகளை கொடுத்து அதற்கு உணவு, மருந்து களையும் கொடுத்து வளர்க்க கொடுக்கிறார்கள். இப்படி வளர்க்கப்படும் கோழிகளில் பிராய்லர் ரக கோழிகள் 45 நாட்களில் நன்கு வளர்ந்துவிடும். கோழியின் எடையைப் கணக்கிட்டு வளர்ப்பவர்களுக்கு ஒரு கிலோவிற்கு 4 முதல் 6 வரை கூலி வழங்கப்படும்.
கடந்த 15 ஆண்டுகளாக பிராய்லர் கோழி நிறுவனங்கள் இந்த விகிதத்திலேயே கோழி வளர்க்க கூலி கொடுத்து வருகின்றனர். ஆனால் தற்பொழுது விலைவாசி உயர்ந்து விட்டதால் இந்தக் கூலி போதாது கிலோவிற்கு 15 ரூபாய் உயர்த்தி தரவேண்டும் என நிறுவனங்களிடம் கோழி பண்ணையாளர்கள் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை எவ்வித பலனும் இல்லையாம். இதனை கண்டித்து இன்று (1.11.20) முதல் தமிழகம் முழுவதும் உள்ள கோழிப்பண்ணை உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 800 கோழி பண்ணைகளில் சுமார் 20 லட்சம் கோழிகள் தேக்கம் அடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பிராய்லர் கோழி விற்பனையில் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தற்பொழுது கிலோ 160 விற்கப்படும் கோழி விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என கோழி பண்ணையாளர்கள் கருதுகின்றனர். தமிழக அரசு இதில் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்