திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இனி 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும். கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் தினமும் 3 ஆயிரம் பேருக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டோக்கன் பெற பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் ஒருநாள் முன்னதாகவே வந்து குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும் முக கவசம் அணியாமலும் பட்டர்கள் காத்திருந்தது கொரோனா தொற்று பரவ வழிவகுக்கும் வகையிலிருந்தது.இதன் காரணமாக இலவச தரிசன டோக்கன் கவுண்டர்களில் விளங்குவது நிறுத்தப்பட்டு ஆன்லைனில் வழங்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இலவச தரிசன டிக்கெட் நிறுத்தப்படும் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவியது.
இதற்கிடையில் இதுகுறித்து பல்வேறு கட்ட ஆலோசனைக்குப் பின்னர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று முதல் 24 மணி நேரமும் இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி திருப்பதி அலிலிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் டிக்கெட்டுகள் என்ற அடிப்படையில் 24 மணி நேரமும் டிக்கெட்டுகள் வழங்கப்படும். அப்படி 6 ஆயிரம் டிக்கெட்டுகள் நிறைவடைந்த பிறகு அதற்கு மறுநாள் உள்ள நாட்களுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த டிக்கெட்டுகளை பெற்ற பக்தர்கள் திருமலையில் அல்லது திருப்பதியில் தேவஸ்தான தங்கும் விடுதிகளில் அறைகளைப் பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்ட முகமாகச் செயல்பட்டு வந்த விஷ்ணு நிவாசம் மற்றும் ஸ்ரீனிவாசன் பக்தர்கள் ஓய்வறையில் இரண்டு ஓய்வறைகள் தயார் செய்யப்பட உள்ளது. ஒரு சில நாட்களில் இந்த இரண்டு ஓய்வறைகளும் பக்தர்கள் தங்குவதற்காக வாடகைக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் திருப்பதிக்கு வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் டிக்கெட் பெற்று ஓரிரு நாள் தங்கினாலும் ஏமாற்றம் இன்றி சுவாமி தரிசனம் செய்து விட்டுச் செல்லலாம் எனத் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.