நெடுஞ்சாலைத் துறையில் தென்காசி மாவட்டத்தில் ஒப்பந்த புள்ளி கோராமல் பல கோடி ரூபாய்க்கு பணி செய்து முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் 5 உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் முறையாக டெண்டர் விடப்படும் தரமற்ற முறையில் இருப்பதாக புகார்கள் வந்தன. சங்கரன்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள சின்ன ஒப்பனையாள்புரம், அக்கரைப்பட்டி, ஆகிய இரண்டு ஊர்களிலும் ஒப்பந்தம் விடப்படாமல் பாலம் கட்டும் பணி, பனையூர் சாலையில் இருந்து ஒப்பனையாள்புரத்திற்கு சாலைகள் அமைக்கும் பணி, சாலைகளுக்கு தடுப்பு சுவர் அமைக்கும் பணி, வீரகேரளம்புதூர் முதல் வீராணம் வரை சாலை அமைக்கும் பணி ஆகிய பணிகள் ஒப்பந்தம் எதுவும் போட படாமலும் பணி ஆணை வழங்க படாமலும் நடந்து வந்தது.
இது குறித்து பல்வேறு சமுதாய அமைப்புகள் அரசியல் கட்சிகள் சார்பில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து இந்த முறைகேடு குறித்து திமுக மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் உள்ளிட்ட மூவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒப்பந்தம் கோராப்படாமல் எப்படி பணிகள் நடக்கிறது என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது வழக்கு தொடரப்பட்டதால் இந்த பணிகள் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சனை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து தென்காசி நெடுஞ்சாலைதுறை கோட்டப் பொறியாளர் சுந்தர் சிங் உதவி கோட்ட பொறியாளர்கள் மெரினா, பிரின்ஸ், உதவி பொறியாளர்கள் வைரமுத்து, செல்வம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை நெடுஞ்சாலைத்துறை மட்டுமல்லாது மற்ற துறை அதிகாரிகள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.