இலவச சலுகைகளை பெற்றால் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்: உயர் நீதிமன்றம் யோசனை

by Balaji, Nov 11, 2020, 13:57 PM IST

அரசு பணியில் உள்ளவர்கள் விதிமுறைகளை மீறி அரசின் இலவச சலுகைகளை பெற்றால் அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள பல்லூரைச் சேர்ந்த ராஜா என்பவர், அரசு தனக்கு வழங்கிய இலவச பட்டா இடத்தில் இருந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் மனுதாரர் அரசு பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அவரது மகன் அரசு மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். அவர்களின் குடும்பத்தினர் மற்றவர்களின் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது அரசு ஊழியர் என்பதை மறைத்து அரசின் இலவச பட்டாவை பெற்றுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றம் ஆசிரியர் மற்றும் மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் ராஜா தமது வழக்கை திரும்பப் பெறுவதாக உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி உத்தரவில் கூறியிருப்பதாவது: மனுதாரர் மற்றும் அவரது மகன் ஆகியோர் அரசு ஊழியர்கள் என்பதை மறைத்து இலவச வீட்டு மனை பட்டா பெற்றுள்ளனர் இதனால் நீதிமன்ற உத்தரவின் பேரில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இவர்களது குடும்பத்தினர் பெயரிலும் 5 பட்டாக்கள் பெற்றுள்ளனர் இந்த விவரம் நீதிமன்றத்திற்கு தெரியவந்ததும் மனுதாரர் மனுவை திரும்ப பெறுவதாக மனு தாக்கல் செய்துள்ளார். ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் அரசின் சலுகையை இந்த குடும்பத்தினர் ஏமாற்றி பெற்றுள்ளனர். இந்த ஒரு குடும்பத்தினர் மட்டும் 5 இலவச வீட்டுமனை பட்டாக்கள் பெற்று அதில் வீடுகளும் கட்டி உள்ளனர்.

இதுபோன்ற அரசு ஊழியர்களின் நடவடிக்கையால்தான் ஊழல் வழக்குகள் அதிகரிக்கின்றன. அரசு ஊழியர் என்பவர் பொதுமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் ஆனால் மனுதாரர் தவறான முன்னுதாரணமாக உள்ளார். எனவே இந்த வழக்கில் வருவாய் துறை செயலர் சமூக நலத்துறை செயலர் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஆகியோரை எதிர் மனுதாரராக இந்த நீதிமன்றம் தாமாக முன் வந்து சேர்க்கிறது. மனுதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ள சொத்துக்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு எவ்வாறு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது என்பது குறித்து தாசில்தார் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.

இதுபோல் எத்தனை பேர் இலவச வீட்டு மனை பட்டா பெற்றுள்ளனர் என்பது குறித்து அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அரசு பணியில் இருப்பவர்கள் இதுபோல் விதிமுறைகளை மீறி அரசின் சலுகைகளை பெற்று இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணியில் இருந்து அவர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் வருங்காலங்களில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க முடியும் மேலும் இவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் இது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்..

You'r reading இலவச சலுகைகளை பெற்றால் அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்: உயர் நீதிமன்றம் யோசனை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை