கொரோனா, மழையால் சென்னையில் பட்டாசு விற்பனை படுத்தது.. வியாபாரிகள் கவலை..

by எஸ். எம். கணபதி, Nov 12, 2020, 10:53 AM IST

சென்னையில் கொரோனா பாதிப்பு மற்றும் மழை காரணமாகப் பட்டாசு விற்பனை மந்தமாக உள்ளது.நாடு முழுவதும் வரும் 14ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக ஏராளமானோருக்கு வேலை இழப்பு, சம்பளக் குறைப்பு, போனஸ் ரத்து என்று பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு தீபாவளி விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் பட்டாசு விற்பனை மிக மோசமாகப் பாதிப்படைந்துள்ளது.

சென்னையில் பட்டாசு விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்காகவும், பாதுகாப்பு கருதியும் கடந்த சில ஆண்டுகளாகத் தீவுத் திடலில் மொத்த பட்டாசு விற்பனைக் கடைகள் நடத்தப்படுகின்றன. இந்த முறையும் தீவுத் திடலில் கடைகள் திறக்கப்பட்டு, வியாபாரம் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த ஆண்டு கடைகளின் எண்ணிக்கை 40 சதவீதம் குறைந்துள்ளது.

எப்போதும் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே கடைகளில் விற்பனை சூடுபிடிக்கும். தற்போது தீபாவளிக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையிலும் விற்பனை மந்தமாகவே இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், மக்களிடம் பண நடமாட்டம் வெகுவாக குறைந்திருப்பதுதான். மேலும் கடந்த 2, 3 நாட்களாகச் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனாலும் பட்டாசு விற்பனை படுத்து விட்டது. இன்று(நவ.12) காலையிலும் பல பகுதிகளில் மழை கொட்டியது. இதனால், தீவுத் திடலில் உள்ள கடைகளில் கூட்டம் இல்லை. எனினும், இன்று மழை விட்டால் கடைசி 2 நாளில் கடந்த ஆண்டு விற்பனையில் பாதியையாவது எட்டி விடலாம் என்று பட்டாசு வியாபாரிகள் நம்புகின்றனர்.

இது குறித்து, தமிழ்நாடு பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு சங்கத் தலைவர் என்.ராஜா கூறுகையில், கொரோனா காரணமாக மக்களிடம் பணநடமாட்டம் குறைந்துள்ளது. இதனால், வழக்கமாகப் பட்டாசு தொழிலில் ஈடுபடும் பல வியாபாரிகள் இந்த ஆண்டு பட்டாசு விற்க முன்வரவில்லை. அதனால்தான், தீவுத்திடலிலும் மொத்த விற்பனை கடைகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. வழக்கமாக, தீபாவளிக்கு முந்தைய ஞாயிறு விற்பனை விறுவிறுப்பாக இருக்கும். இந்த முறை கடைசி 2 நாட்களில் வியாபாரம் அதிகமாகும் என நம்புகிறோம் என்றார்.

தீபாவளியை ஒட்டி, சிவகாசியில் இருந்து வடமாநிலங்களுக்கு ஏராளமாகப் பட்டாசுகள் விற்பனைக்குப் போகும். இந்த முறை கொரோனா பாதிப்பு மற்றும் வடமாநிலங்களில் காற்று மாசு அதிகரிப்பால் பட்டாசுகளுக்குத் தடை போன்ற காரணங்களால் சிவகாசி பட்டாசு விற்பனை சரிந்துள்ளது. இதனால், பட்டாசுத் தொழிற்சாலைகள் அதிகமான இழப்பைச் சந்தித்து வருகின்றன.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை