கொரோனா நோயாளிகள், தனிமையில் இருப்பவர்கள் ஓட்டு போடலாமா?

by Nishanth, Nov 12, 2020, 11:00 AM IST

கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களும் ஓட்டுப் போடலாம். வாக்குப் பதிவு நடைபெறும் தினத்தன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை இவர்களுக்கு ஓட்டுப் போட வசதி ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.கேரளாவில் அடுத்த மாதம் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகின்றது. முதல் கட்டத்தில் டிசம்பர் 8ம் தேதி 5 மாவட்டங்களிலும், 10ம் தேதி 2வது கட்டத்தில் 5 மாவட்டங்களிலும் 14ம் தேதி 3ம் கட்டத்தில் 4 மாவட்டங்களிலும் தேர்தல் நடக்க உள்ளது.

இன்று முதல் அனைத்து வார்டுகளுக்கும் வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. பெரும்பாலான வார்டுகளில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களுக்கு மேல் உள்ள நிலையிலும் தேர்தல் நடைபெற உள்ள அனைத்து பகுதிகளிலும் இப்போதே வேட்பாளர்கள் முழுவீச்சில் பிரச்சாரத்தில் ஈடுபடத் தொடங்கி விட்டனர்.

கேரளாவில் தற்போது கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால் வாக்குப்பதிவு கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மட்டுமே நடத்தப்படும் என்று கேரள மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி பாஸ்கரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஓட்டுப் போட வருபவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒட்டு போட வரிசையில் நிற்கும்போது சமூக அகலத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல வாக்குப்பதிவு மையத்தில் உள்ள அதிகாரிகளும் முகக் கவசம் அணிவது உட்பட கொரோனா நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்கள் தபால் ஓட்டுப் போடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் வாக்குப்பதிவுக்கு 3 நாட்களுக்கு முன்பே இது குறித்துத் தேர்தல் அதிகாரிக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் அதன் பின்னர் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்கள் தபால் ஓட்டுப் போட வாய்ப்பு கிடைக்காமல் போகும். எனவே தேர்தலுக்கு முந்தைய நாள் அல்லது அதற்கு 2 நாட்களுக்கு முன்பு கொரோனா பாதிக்கப்படுபவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களுக்கு ஓட்டுப் போட வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து அவர்களுக்கும் ஓட்டுப் போட வசதி ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை இவர்கள் ஓட்டுப் போடலாம். ஓட்டுப்போட வருபவர்கள் பாதுகாப்பு கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You'r reading கொரோனா நோயாளிகள், தனிமையில் இருப்பவர்கள் ஓட்டு போடலாமா? Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை