பட்டாசு தொழிலை பாதுகாக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம் : மாணிக் தாகூர்

பட்டாசு தொழிலைப் பாதுகாக்கவும் உலகளவில் பட்டாசுகளை ஏற்றுமதி செய்ய வலியுறுத்தியும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்பிக்கள் குரல் கொடுக்க உள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்பித் தெரிவித்தார்.

by Balaji, Nov 17, 2020, 11:07 AM IST

சிவகாசியில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு மூன்று மாதத்திற்கு முன்பாக பட்டாசு தொழிலுக்குப் பிரச்சனைகள் உருவாகும். தீபாவளி முடிந்த பின் அந்த பிரச்சனை குறித்து யாரும் பேசுவதில்லை. எனவே பட்டாசு தொழிலைப் பாதுகாக்க நிரந்தர உயர்மட்ட குழு ஒன்றைத் தமிழக அரசு அமைத்து தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பூரில் பின்னலாடை தொழிலைக் காக்க , பிரச்சனைகளுக்கு தீர்வு காண உள்ள அமைப்பைப் போன்று பட்டாசு தொழிலைப் பாதுகாக்க ஒரு அமைப்பை வேண்டும். உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் வரை சென்று பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொள்ளும் பட்டாசு தொழிலுக்குக் கொரானா காலத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

ராஜஸ்தான் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை காரணமாகப் பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு அந்தந்த மாநில அரசுகளே பொறுப்பு. பொறுப்பற்ற முறையில் சில மாநில முதல்வர்கள் செயல்பட்டதால் பட்டாசுக்குத் தடை என அறிவிக்கப் பட்டு சிவகாசியின் வாழ்வாதாரம் சிதறடிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவது அந்தந்த மாநில அரசுகளின் கடமை. சிவகாசியில் தயாராகும் பட்டாசுகளை உலக அளவில் கொண்டு செல்ல மத்திய அரசின் ஏற்றுமதி மையத்தைச் சிவகாசியில் அமைக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து பட்டாசு தொழிலைப் பாதுகாக்க வேண்டும். சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப் படுவதாகச் சிலர் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்த தவறான பிரச்சாரம் உலகளவில் சிவகாசி பட்டாசுகள் செல்லவிடாமல் தடுப்பதற்காகவும், சீன பட்டாசுகளுடன் சிவகாசி பட்டாசு போட்டிப் போட முடியாத நிலைக்குத் தள்ளுவதற்கு உண்டான ஒரு சதி வேலை .

தவறான பிரச்சாரம் செய்து வருபவர்கள் சிவகாசிக்கு நேரில் வந்து தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கின்றனர் என நிரூபித்தால் நான் எனது எம். பி. பதவியை ராஜினாமா செய்யத்தயார். டெல்லி, மும்பை போன்ற இந்தியாவின் பெருநகரங்களில் உள்ள அதிமேதாவிகள் பேசிவரும் பொய்யான குற்றச்சாட்டுகளால் பட்டாசு தொழில் அழிந்து விடக்கூடாது. நூற்றாண்டை எதிர்நோக்கியிருக்கும் இந்த பட்டாசு தொழிலைப் பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும். எனவே சிவகாசி பட்டாசு உலக அளவில் கொண்டு செல்லப்பட்டு அன்னியச் செலாவணியை ஈட்டுக் கொடுக்கக்கூடிய ஒரு தொழிலாக உருவாக்க வேண்டும். அதற்கான முழு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். சிவகாசி பட்டாசு தொழிலைப் பாதுகாத்து உலக அளவில் ஏற்றுமதி செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றார்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை