100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் தினக்கூலி ரூ.205ல் இருந்து ரூ.224 ஆக உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆறுகள், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் போன்ற நீர்நிலைகளை தூர்வாருதல், புதிதாக கட்டுவது, சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டத்தில் பணிபுரிவோர்க்கு தினக்கூலியாக 205 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.
இதேபோல், 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் தினக்கூலியாக 205 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.இதை, தற்போது நாள் ஒன்றுக்கு 224 ரூபாய் என்று மாற்றி அமைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தற்போது வழங்கப்பட்டு வரும் தினக்கூலியை விட 19 ரூபாய் கூடுதலாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 1ம் நாளான இன்று நிதி ஆண்டு துவக்கமாக கருதப்படுவதால் இன்று முதல் தினக்கூலி உயர் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.