ஐபிஎல் கிரிக்கெட்டின் பதினோராவது சீசன் இந்த மாதம் 7-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் குறித்து விமர்சனம் செய்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட்.
மும்பையைச் சேர்ந்த ராஜ்புட், தன் மாநில அணி ரஞ்சி டிராபியில் தோல்விகளை சந்தித்து வருவதற்கு பிரதான காரணம் ஐபிஎல்-தான் என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் கருத்தை அவர் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசி அதிர்ச்சி கிளப்பியுள்ளார்.
ராஜ்புட் மேலும் பேசுகையில், `கிரிக்கெட் என்பது தற்போது `அதிரடி ஆட்டம்’ என்று பொருள் கொள்ளப்படுகிறது. மும்பையைச் சேர்ந்த இளைஞர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதைத்தான் கனவாக நினைக்கிறார்கள். இந்த மனநிலை மிகத் தவறானது.
முதலில் அவர்கள் மாநில அணியில் விளையாடுவதைத்தான் பிரதானப்படுத்த வேண்டும். ஐபிஎல் அதன் பின்னர் தானாக வரும். இந்த மனநிலை மாற்றத்துக்குக் காரணம் பணம்தான். இதனால்தான், நம் மாநில அணி இந்திய அளவில் இறங்கு முகம் கொண்டிருக்கிறது’ என்று வெளிப்படையாக விமர்சனம் செய்துள்ளார். ஐபிஎல்-ன் தற்போதைய சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.