மீண்டும் அதிமுகவில் இணையும் அப்சரா ரெட்டி.. காங்கிரஸ் அழிந்து விட்டதாகப் பேட்டி..

by எஸ். எம். கணபதி, Nov 21, 2020, 09:22 AM IST

காங்கிரஸ் மகளிர் அணியின் தேசிய செயலாளராக இருந்த திருநங்கை அப்சரா ரெட்டி மீண்டும் அதிமுகவில் சேருகிறார். மக்களுடன் தொடர்பில்லாத அளவுக்குக் காங்கிரஸ் அழிந்து விட்டதாக அவர் பேட்டியளித்துள்ளார்.ஆங்கில பத்திரிகையில் சென்னை பதிப்பில் பணியாற்றியவர் திருநங்கை அப்சரா ரெட்டி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குபவராகவும் திகழ்ந்தார். மக்களிடம் பிரபலமான அப்சரா ரெட்டி, கடந்த 2016-ம் ஆண்டு அ.தி.மு.க கட்சியில் சேர்ந்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க. 2 ஆக உடைந்த போது அவர் டி.டி.வி.தினகரன் அணிக்குச் சென்றார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அவர் ராகுல்காந்தியைச் சந்தித்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவருக்குக் காங்கிரஸ் மகளிர் அணியின் தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதைப் பலரும் வரவேற்று அவருக்கு முக்கியத்துவம் அளித்தனர்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பிறகு, கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். வேறு தலைவரைத் தேர்ந்தெடுக்க முடியாமல், சோனியா காந்தியே இடைக்காலத் தலைவரானார். இதைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் முக்கியப் பிரமுகர்கள் அக்கட்சியில் இருந்து விலகிச் சென்றனர். தமிழகத்தில் சமீபத்தில் நடிகை குஷ்பு, காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். தற்போது அப்சராவும் காங்கிரசில் இருந்து விலகியுள்ளார். அவர் மீண்டும் அதிமுகவில் சேரவுள்ளார். அவர் ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தியின் செயல்பாடு சரியாக இல்லை. தலைமைப் பொறுப்பில் உள்ள சோனியா காந்தியின் கட்டுப்பாட்டில் கட்சி இல்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு மக்களுடன் தொடர்பு இல்லாமல் போய் விட்டது. தமிழகத்தில் அக்கட்சியில் மக்களின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளக்கூடிய தலைவர் இல்லை. மக்களுடன் தொடர்பில்லாத கட்சியாகக் காங்கிரஸ் அழிந்து விட்டது. அதே சமயம், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் மக்களுக்கு நல்ல திட்டங்களைச் செயல்படுத்தி ஆட்சி செய்து வருகிறார்கள். எனவே, மீண்டும் அதிமுகவில் சேருகிறேன்.

இவ்வாறு அப்சரா ரெட்டி தெரிவித்துள்ளார்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை