இரண்டு நாட்கள் வெளியே செல்ல வேண்டாம்... நிவார் புயலால் தமிழக அரசு எச்சரிக்கை!
நாளை மறுநாள் உருவாகவிருக்கும் புயலுக்கு நிவார் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நிவார் என்றால் பாதுகாப்பு அல்லது தடுப்பு என்று பொருள்.இந்தியப் பெருங்கடல் அருகே உருவாகும் புயல்களுக்கு ஏற்கெனவே ஆம்பன், நிசர்கா, கடி என புயலுக்கு பெயர் சூட்டப் பட்டுள்ளது. அந்த வரிசையில் அடுத்ததாக இருப்பது நிவார்.வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலை, இன்று மேலும் தீவிரமடைந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவானது. இது நாளை மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் புதுச்சேரியில் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 740 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.நிவர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதன்கிழமை நண்பகல் வாக்கில் கரையைக் கடக்கும்.
இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, ``புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களில், 25, 26ல் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கவும். அத்தியாவசிய காரணங்கள் அல்லாமல் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். 7 மாவட்டங்களில் நாளை மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும். அதன்படி, புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர்,
கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும். ஆதார், ரேஷன் கார்டு போன்ற முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வையுங்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதற்கிடையே, பெரம்பூர், கொளத்தூர், மாதவரம், திரு.வி.க நகர், மூலக்கடை, கொடுங்கையூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. நெற்குன்றம், மதுரவாயல், வானகரம், போரூர், வளசரவாக்கம், பூந்தமல்லி, மாங்காடு, குன்றத்தூர், கரையான்சாவடி குமணன்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
You'r reading இரண்டு நாட்கள் வெளியே செல்ல வேண்டாம்... நிவார் புயலால் தமிழக அரசு எச்சரிக்கை! Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News