சென்னையில் இரண்டாவது நாளாகத் தொடரும் கனமழையால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கூரைகள் சரிந்து விழுந்துள்ளன.வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலைக்குள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், சென்னை, புதுச்சேரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்புவதால், ஏரி திறக்கப்பட்டுள்ளது. இதனால், குன்றத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம், கானு நகர், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலணி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் மாநகராட்சி நிவாரண மையங்களுக்கு அனுப்பப்பட்டுத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்களில் நேற்று மதியம் முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று காலையில் இருந்து கனமழை கொட்டி வருகிறது. வியாசர்பாடி சுரங்கப் பாதை உள்பட வடசென்னையின் பல இடங்களிலும் இடுப்பு அளவுக்கு மழைநீர் தண்ணீர் தேங்கியுள்ளது.அண்ணாசாலையில் உள்ள தர்காவின் மேற்கூரைகள் சரிந்து விழுந்துள்ளன. பல இடங்களில் பழைய கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. மயிலாப்பூர், கே.கே.நகர் உள்படப் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால், வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் வெள்ளமாகக் காட்சியளிப்பதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.