7.5 சதவீத உள் இட ஒதுக்கீடில் மருத்துவ கலந்தாய்வில் தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தும் பணம் கட்ட முடியாமல் வெளியேறிய மாணவர்களை மீண்டும் மருத்துவ படிப்பில் சேர்வதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஒதுக்கீட்டின் படி சில மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வறுமை காரணமாக பணம் செலுத்த முடியாமல் பலர் கல்லூரிகளை தேர்வு செய்வதை கைவிட்டு விட்டனர். இது குறித்து ஊடகங்களில் தொடர்ந்து செய்தி வெளியானதை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் அந்த மாணவர்களின் படிப்பு செலவை திமுக ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தார்.இதைத் தொடர்ந்து முதலமைச்சர் அரசே அந்த மாணவர்களுக்கான படிப்புச் செலவை ஏற்கும் என்று உத்தரவிட்டார்.
ஆனால் இந்த உத்தரவு தாமதமாக வெளியானதால் தேர்வு செய்த மாணவர்கள் பலரும் மருத்துவ படிப்பை கைவிட்டு விட்டனர். இந்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த முகமது ஜமீன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் தான் வீரசிகாமணி கிராமத்தில் மிகவும் ஏழ்மையான நிலையில் வசித்து வருகிறேன். எனது தந்தை கூலி வேலை செய்து குடும்பத்தை நகர்த்தி வரும் நிலையில், நான் அரசுப் பள்ளியில் பயின்று 12ஆம் வகுப்பு மற்றும் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டேன். தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.டி.எஸ் படிப்புக்கான வாய்ப்புகள் இருந்தன. அதற்கான கட்டணத்தை செலுத்த இயலாது என்பதாலும் , அன்றே 11,610 ரூபாயை செலுத்துமாறு சொல்லப்பட்டது. அதை செலுத்த இயலாததன் காரணமாக நான் கலந்தாய்வில் எந்த இடத்தையும் தேர்வு செய்யவில்லை.
இந்த நிலையில் நவம்பர் 19ஆம் தேதி தமிழக முதல்வர் அரசுப் பள்ளிகளில் பயின்று மருத்துவப் படிப்பிற்கு தேர்வான மாணவர்களின் ஒட்டுமொத்த கல்விச் செலவையும் ஏற்பதாக அறிவித்துள்ளார். இது விஷயம் முன்பே அறிவிக்கப் பட்டிருந்தால் பல் மருத்துவப் படிப்பிற்கான இடத்தைத் தேர்வு செய்திருப்பேன். வறுமையின் காரணமாக தனியார் மருத்துவக் கல்லூரியில் கட்டணத்தைச் செலுத்த இயலாது என்பதால் தான் அன்று நான் எந்த கல்லூரியையும் தேர்வு செய்யவில்லை. என்னைப் போலவே மேலும் 3 மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே பல் மருத்துவத்திற்கான இடத்தினை எனக்கு ஒதுக்கி வைக்கவும், இடத்தை தேர்வை செய்ய மீண்டும் வாய்ப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என நீதிபதிகள் அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் மருத்துவ கலந்தாய்வில் விடுபட்ட மாணவர்களை மீண்டும் மருத்துவ படிப்பில் சேர் ப்பற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றது. இன்னும் இரண்டு நாட்கள் கால அவகாசம் தேவை. அதற்குள் நல்ல அறிவிப்பு வரும் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதிகள் வரும் காலங்களில் அரசு பள்ளியில் பயின்று மருத்துவ படிப்பில் சேரும் மாணவர்கள் மட்டுமல்லாது பிற உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களின் கட்டணத்தையும் அரசே ஏற்கலாம் எனவும் யோசனை தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து இதுகுறித்து தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.