திமுக மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை(டிச.3) ஆலோசனை நடத்தவுள்ளார். மத்திய பாஜக அரசு சமீபத்தில் 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்கள் தங்களுக்கு பாதகமாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாகவும் உள்ளதாக கூறி, நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களின் விவசாயிகள், டெல்லியில் கடந்த 7 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், இதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை(டிச.3) நடைபெறுகிறது. இது குறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் டிச.3 காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். இதில் விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.