தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உடனடியாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது. தூத்துக்குடியில் தாமிரம் தயாரிக்கும் ஸ்டெர்லைட் ஆலை செயல்பட்டு வந்தது. இதில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் அந்நகரில் வசிக்கும் மக்களுக்கு பல நோய்கள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால், அந்த தொழிற்சாலையை மூட வேண்டுமென்று கோரி பெரும் போராட்டங்கள் நடந்தன. கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து மே 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையின் வேதாந்தா நிறுவனம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
அதே சமயம், அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சுபுகையால் மக்களுக்கு நோய்கள் பரவுவதாகவும், தொழிற்சாலையை திறக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்து, ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பாத்திமா, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரவை மாநில இளைஞர் அணி அமைப்பாளர் தெர்மல் ராஜா, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வக்கீல் ராஜூ, மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் அர்ஜூனன், தூத்துக்குடி மாவட்ட ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வக்கீல் அரிராகவன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோர் விசாரித்து அளித்த தீர்ப்பில், ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்தனர். வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தனர். ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இந்த அப்பீல் மனு, நீதிபதி ரோகிண்டன் நாரிமன் தலைமையிலான அமர்வு முன்பாக இன்று(டிச.2) விசாரணைக்கு வந்தது. அப்போது ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டுமென வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், இதற்கு உடனடியாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று மறுத்த நீதிபதிகள், வழக்கில் விரிவான விசாரணை நடத்த வேண்டுமென்று கூறி, ஜனவரி மாதத்திற்கு தள்ளி வைத்தனர்.