ரஜினியின் புதிய கட்சிக்கு பாஜக நிர்வாகி தலைமை.. கமல் கட்சி பரபரப்பு தகவல்..

by எஸ். எம். கணபதி, Dec 3, 2020, 15:08 PM IST

ரஜினி தொடங்கவுள்ள புதிய கட்சிக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராக பாஜக மாநில நிர்வாகி ஒருவர் நியமிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் கடந்த 1996ம் ஆண்டில் அப்போதைய அதிமுக ஆட்சிக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்தார். இன்னொரு முறை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று ஆவேசமாக முழங்கினார். அந்த தேர்தலுக்குப் பிறகு அவர் அரசியல்ரீதியாக விமர்சிப்பதைத் தவிர்த்தார்.

ஆனால், அவரது ரசிகர்கள் அவரை கட்சி தொடங்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ரஜினியும் அவ்வப்போது மாறி, மாறி பேசி வந்தார்.கடைசியாக, ரஜினி கடந்த நவ.30ம் தேதி தனது மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, இன்று(டிச.3) ரஜினி அளித்த பேட்டியில், ஜனவரியில் புதிய கட்சி தொடங்குவேன் என்றும், டிசம்பர் 31ம் தேதியன்று அதற்கான தேதியை அறிவிப்பேன் என்று அறிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், எல்லோருக்கும் தலையெழுத்து இருக்கும். அதே போல, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. எல்லோரும் சேர்ந்து மாத்துவோம். இப்ப இல்லேன்னா.. எப்பவும் இல்லே.. என்று தெரிவித்தார்.மேலும், தனது கட்சிக்கு மேற்பார்வையாளராகத் தமிழருவி மணியனையும், தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் அறிவித்து அவர்களை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிப் பிரமுகரும், தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு:திருவாளர் ரஜினிகாந்த் முடிவிற்குப் பின்னால் பாஜகவின் தூண்டுதல் இருக்கிறது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தமிழக அரசியல், ஆட்சி மாற்றம், இப்ப இல்லேன்னா எப்பவும் இல்லைதான். ஆனா, பாஜகவின் மனசாட்சியா நீங்க இருந்தா மக்களின் மனசாட்சி வேற மாதிரி இருக்கும்.இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் கூறியிருப்பது உண்மைதான். பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக இருப்பவர்தான் அர்ஜுன மூர்த்தி. அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்னமும் கூட உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பாஜக ஆலோசனைக் கூட்டம் குறித்த படங்கள், பதிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் அவர், அறிவுசார் பிரிவின் மாநில தலைவராக, மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். அமித்ஷாஜி உரை எங்களுக்குப் புத்துணர்ச்சியும், உத்வேகத்தையும் கொடுத்தது என்று குறிப்பிட்டிருக்கிறார். அதே போல், சமீபத்தில் பாஜகவினர் பழனியில் நடத்திய வேல்யாத்திரையில் அர்ஜுன மூர்த்தி கலந்து கொண்டு கைதாகியிருக்கும் படங்களும் வெளிவந்துள்ளன.

மேலும், அர்ஜுன மூர்த்தி நவ.11ம் தேதி தினமலர் நாளிதழில் சென்னை பக்கத்தில் அரை பக்க விளம்பரம் கொடுத்துள்ளார். ஏற்கனவே பாஜக மாநில தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் முதல் மத்திய அமைச்சர் அமித்ஷா வரை பாஜகவினர் மட்டுமே ரஜினியை அரசியலுக்கு வருமாறும், புதிய கட்சி தொடங்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தனர்.இந்நிலையில், பாஜக நிர்வாகி ஒருவரையே ரஜினி தான் தொடங்கவுள்ள கட்சிக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவித்திருக்கிறார். இது, பாஜகவின் ஊதுகுழல்தான் ரஜினிகாந்த் என்றும், பாஜகவின் அழுத்தத்தால்தான் அவர் அரசியலுக்கு வருகிறார் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவதை மக்கள் நம்ப வேண்டியிருக்கிறது!

You'r reading ரஜினியின் புதிய கட்சிக்கு பாஜக நிர்வாகி தலைமை.. கமல் கட்சி பரபரப்பு தகவல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை