பிரேத பரிசோதனைகளைத் தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரை பேரையூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரைக் கடந்த செப்டம்பர் மாதம் 16-ல் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் மறு நாள் அவரது வீட்டருகே மரத்தில் ரமேஷ் தூக்கில் சடலமாகத் தொங்கினார். போலீஸார் ரமேஷை அடித்துக் கொன்று விட்டு தூக்கில் தொங்க விட்டதாகக் கூறி மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடவும், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றவும் கோரி ரமேஷின் சகோதரர் சந்தோஷ் உயர்நீதிமன்ற மதுரையில் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். அந்த உத்தரவில் இனி பிரேதப் பரிசோதனை செய்யப்படும் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து சில உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
இதன்படி இறந்தவரின் உடலின் முன், பின் பகுதியை இறந்தவரின் உறவினர் அல்லது பிரதிநிதி பார்வையிட்டு வீடியோ, புகைப்படம் எடுக்க அனுமதிக்க வேண்டும்.இறந்தவரின் உடலை உறவினர்கள் யாரும் பார்வையிடுவதற்கு முன்பு பிரேதப் பரிசோதனையைத் தொடங்கக்கூடாது. உறவினர்கள் இறந்தவர் உடலைப் பார்க்க மறுத்தால் நீதித்துறை நடுவர் பிரேதப் பரிசோதனைக்கு அனுமதி வழங்கலாம்.பிரேதப் பரிசோதனையைத் தொடக்கம் முதல் முடிவு வரை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். உடலில் இருந்து எடுக்கப்படும் ஒவ்வொரு உறுப்புகளையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.
பிரேதப் பரிசோதனை செய்து அதில் உறவினர்கள் நீதிமன்றம் செல்வதாகத் தெரிவித்தால் உடலைக் குறைந்தபட்சம் 48 மணி நேரம் பாதுகாக்க வேண்டும். உடல் உடனடியாக எரியூட்டப்பட்டால் இரண்டாவது பிரேதப் பரிசோதனை கோரிக்கை நிறைவேறாமல் போய்விடுகிறது.ஹத்ராஸில் கூட்டுப் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண் அவசர அவசரமாக எரியூட்டப்பட்டது சர்ச்சையானது .இது போன்ற நிகழ்வுகளைப் பாதிக்கப்பட்டவர்கள் மனதில் நம்பிக்கை ஏற்பட போலீஸார் தவிர்க்க வேண்டும் என நீதிபதி தமது உத்தரவில் கூறியுள்ளார்.