விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணி தலைவர்கள் டிச.18ல் உண்ணாவிரதம்..

by எஸ். எம். கணபதி, Dec 14, 2020, 14:29 PM IST

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:நாடாளுமன்றத்தில் வழக்கமாகப் பின்பற்றப்பட வேண்டிய ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிராக, மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி, நாட்டில் உள்ள கோடானு கோடி விவசாயிகள் அனைவரையும், ஒரு சில கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்க மத்திய பா.ஜ.க. அரசு துடிக்கிறது. இந்த சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, கடந்த 19 நாட்களாக அறவழியில் அமைதியாகப் போராடி வரும் பல லட்சக்கணக்கான விவசாயிகளின் மனங்களில் கொழுந்து விட்டெறியும் உணர்வுகளைக் கொஞ்சமும் மதிக்காமல் கொச்சைப் படுத்தி வருகிறது.

ஒட்டுமொத்த நாட்டு மக்களின் உணவுரிமைகளையும், உழுதுண்போரின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பதற்காக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், கண்ணியமாகப் போராடி வரும் தேசப் பற்றாளர்களான விவசாயப் பெருமக்களை அவமதித்திடும் வகையில் - அந்தப் போராட்டத்தில் “மாவோயிஸ்ட்டுகள்” புகுந்து விட்டார்கள் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மண்ணை வாரியிறைத்துப் பேசியிருக்கிறார்.

மத்திய அமைச்சர்கள் பலரும் இது போன்ற அபத்தமான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இதற்கு தி.மு.க தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். விவசாயிகளின் மகத்தான போராட்டத்தைச் சரியாக மதிப்பிடாமல் அவமதித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் தவறான அணுகுமுறை குறித்து எந்தக் கருத்தையும் கூறாமல் - மத்திய அமைச்சர்களின் பிற்போக்குத் தனமான கருத்தையும் கண்டிக்காமல் - இருக்கும் முதலமைச்சர் பழனிச்சாமியின் சுயநலப் போக்கு மிகுந்த கவலைக்குரியது மட்டுமின்றி கண்டனத்திற்கும் உரியது.டெல்லியை முற்றுகையிட்டுப் போராடி வரும் விவசாயிகளுக்காக, திமுக கூட்டணிக் கட்சிகளும் உணர்வுப் பூர்வமாகத் தொடர்ந்து ஆதரித்து கூட்டாகவும்-தனியாகவும் போராட்டங்களை நடத்தி வந்தாலும், இதுவரை மத்திய பா.ஜ.க. அரசு குறைந்தபட்ச ஆதார விலையே இல்லாத சட்டங்களையும், இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கொண்டு வரப்படும் மின்சாரத் திருத்தச் சட்டத்தையும் திரும்பப் பெற முன்வரவில்லை.

எதேச்சதிகாரப் போக்குடனும்- ஆணவப் பேச்சுக்களுடனும் விவசாயிகள் போராட்டத்தைக் கையாளும் மத்திய பா.ஜ.க. அரசினையும், அதை ஒரு வார்த்தை கூட தட்டிக் கேட்கத் தைரியமின்றி அடங்கி ஒடுங்கி இருக்கும் முதலமைச்சர் பழனிச்சாமியையும் கண்டித்தும், டெல்லியில் கொரோனா காலத்திலும் உயிரைத் தியாக வேள்வியாக முன்னிறுத்தி, அறவழியில் போராடி வரும் விவசாயிகளுக்கும் ஆதரவு அளித்தும் வரும் 18ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 வரை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு நாள் அடையாள “உண்ணாநிலைப் போராட்டம்” நடைபெறும்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

You'r reading விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக கூட்டணி தலைவர்கள் டிச.18ல் உண்ணாவிரதம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை