போலீஸ் அதிகாரியாக நடித்த தர்பார் படத்தை முடித்த பிறகு குடும்ப பின்னணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் மீனா, குஷ்பு, நயன்தாரா. கீர்த்தி சுரேஷ் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டது. கடந்த 7 மாதமாகப் படப்பிடிப்பு தொடங்காமல் உள்ளது.
கொரோனா தொற்று பரவல் இருக்கும் நிலையில் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்தார். அவர் இல்லாத காட்சிகளை படமாக்கத் திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் கடந்த 2 மாதத்துக்கு முன் நடந்தது. பின்னர் அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது படப்பிடிப்பில் பங்கேற்க ரஜினி சம்மதம் தெரிவித்ததையடுத்து அதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. வரும் 15ம் தேதி முதல் ஐதராபாத் ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் அண்ணாத்த படப் பிடிப்பு மீண்டும் தொடங்குகிறது.
அதில் பங்கேற்க ரஜினி நேற்று மாலை சென்னையிலிருந்து ஐதராபாத் புறப்பட்டார்.
அதற்கு முதல் நாள் தான் ரஜினி காந்த தந்து 70வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்குப் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அனைவருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்தார். பிறந்த முடித்த மறுநாள் அண்ணாத்த படப்பிடிப்புக்குப் புறப்பட்ட ரஜினிக்காகத் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் விமானம் அருகில் வாகனத்தில் வந்து இறங்கி அங்கிருந்தவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு விமானத்தில் ஏறினார்.
அங்கு அவருக்கு அண்ணாத்த படக்குழு சர்ப்ரைஸ் வைத்திருந்தது. நிறைய கேக்குகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. விமானத்தில் நடிகை நயன்தாராவும் இருந்தார். ரஜினி விமானத்துக்குள் வந்ததும் எல்லோரும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். பிறகு அங்கு வைக்கப்பட்டிருந்த கேக்கை ரஜினி வெட்ட அனைவரும் ஹாப்பி பர்த்டே பாடல் பாடினார்கள். ரஜினியுடன் அவரது மகள் ஐஸ்வர்யாவும் உடன் வந்தார்.அண்ணாத்த படத்தின் படப் பிடிப்பு தொடர்ந்து 45 நாட்கள் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனாலும் புத்தாண்டுக்கு ஒருநாள் முன்னதாக படப் பிடிப்பிலிருந்து சென்னை திரும்புகிறார் ரஜினி. டிசம்பர் 31ம் தேதி புதிய கட்சி தொடங்குவதற்கான தேதி அறிவிக்கிறார். அதுபற்றிய அறிவிப்பை வெளியிட்டுவிட்டு பிறகு மீண்டும் ஐதராபாத் சென்று படப்பிடிப்பில் பங்கேற்கிறார். அவருடன் மீனா, குஷ்பு, நயன் தாரா, கீர்த்தி சுரேஷ் மற்ற நட்சத்திரங்கள் படப்பிடிப்பில் பங்கேற்கின்றனர்.
அண்ணாத்த படப்பிடிப்பை முற்றிலுமாக முடித்து கொடுத்த பிறகு ரஜினிகாந்த் அரசியல் பணிகளில் தீவிரமாக இறங்க உள்ளார். தேர்தலுக்காக கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்து அரசியல் தலைவர்களும் பிரசாரம் தொடங்கி விட்ட நிலையில் ரஜினி தற்போது படப்பிடிப்புக்குப் புறப்பட்டிருக்கிறார். தமிழகம் முழுவதும் ரஜினி பிரசாரம் செய்வாரா? அல்லது ஒரு சில நகரங்களில் மட்டும் செய்வாரா அல்லது வேறு திட்டம் உள்ளதா என்பது அவர் கட்சி தொடங்கும் ஜனவரி மாதம் தெரியவரும்.