வெறும் ரூபத்தை விஸ்வரூபமாக ஆக்குகிறார்கள் : திண்டுக்கல்லில் கமல் ஆவேசம்

Advertisement

சீர் அமைப்போம் தமிழகத்தை என்ற அடிப்படையில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று இரவு திண்டுக்கல்லில் கமலஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.அதில் அவர் பேசுகையில் ஜனநாயகம் என்பது அன்றாடம் காவல் காக்கப்பட வேண்டிய ஒன்று. நமது உடல் ஆரோக்கியத்தைப் போல அன்றாடம் அதையும் கவனிக்க வேண்டும் இன்று இந்திய ஜனநாயகம் நோய்வாய்ப்பட்டு உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது அதனால் தான் எங்களது கட்சியில் அதிகமான மருத்துவர்கள் உள்ளனர்.

எனக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது நான் போடும் ஊசி வித்தியாசமாக இருக்கும். அந்த ஊசி நல்லவர்களுக்கு மட்டும் வலிக்காது. கயவர்களுக்கு வலிக்கும். மக்கள் நினைத்தால் கத்தியின்றி ரத்தமின்றி பெரும் புரட்சியை உருவாக்க முடியும். அதற்கு நூல் முனையாக நான் இருக்கின்றேன் நீங்கள் இயக்கும் கருவியாக நான் இருக்க முயல்கின்றேன்.நமக்கு டார்ச்லைட் சின்னம் இந்திய தேர்தல் ஆணையத்தால் மறுக்கப்பட்டுள்ளது. அது இல்லை என்றால் கலங்கரை விளக்கத்தை நாங்கள் பெறுவோம்.

இந்த சாதாரண ரூபத்தை விஸ்வரூபமாக மாற்றுவது இவர்கள்தான் . எங்களுக்குப் போட்டி ஜனநாயகத்தின் எதிரிகளோடு தான். ஒருவருக்கு ஒருவர் அல்ல. வரும் தேர்தலில் வெற்றிக்கான பாதை கண்முன் தெரிகிறது. ஏழை மக்களிடம் காசை காட்டினால் ஆசை வரத்தான் செய்யும். வறுமை அவர்களின் பின்பக்கம் உள்ளது ஏழைகளுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கொள்ளைக்காரர்கள் ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கின்றார்கள். அதை அவர்களது பாக்கெட்டிலிருந்து கொடுப்பது இல்லை உங்களது பையிலிருந்து எடுத்ததைத்தான் கொடுக்கின்றார்கள்.

உங்களை அடிமாட்டு விலைக்கு விற்கிறார்கள். 5 லட்சம் 50 லட்சம் எனப் பேரம் பேச வேண்டிய நீங்கள் வெறும் 5,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறீர்கள். எங்களது கட்சிக்கு நேர்மை மட்டும்தான் யுத்தி. தேர்தல் என்றால் நேர்மை மட்டுமில்லை கொஞ்சம் தைரியமும் வேண்டும். எங்களைப் பொறுத்தவரை நேர்மையும் தைரியமும் இரட்டை மாட்டு வண்டி. இதில் ஒரு மாடு இல்லை என்றால் வண்டி ஓடாது. போட்டிகள் எல்லாம் நமக்குக் கயவர்களுடன் தான். இவ்வாறு கமலஹாசன் பேசினார்.

Advertisement

READ MORE ABOUT :

/body>