ரெய்டுகளுக்கு அரண்டு தமிழக உரிமைகளை அடகு வைக்கும் எடப்பாடி.. மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு..

by எஸ். எம். கணபதி, Dec 15, 2020, 13:37 PM IST

பா.ஜ.க.வை முறைத்தால் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ரெய்டு வரும் என்று அரண்டு மிரண்டு தமிழகத்தின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரி அரங்கில் சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற படத்திறப்பு நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டு, மறைந்த நாகை முருகேசன், மேரி லூர்துசாமி, மடுவை அ.துரை, கே.எஸ்.ரூஸோ ஆகியோரின் திருவுருவப் படங்களைத் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது: திமுக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற இயக்கமாக இருக்கிறது. எத்தனை பொய் பிரச்சாரங்கள் - எவ்வளவு பழிச்சொற்கள் வந்தாலும் இந்த இயக்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. கொரோனா காலத்தில் - நான் உங்களைக் காணொலியிலும் சந்தித்தேன்; நேரிலும் சந்தித்தேன்.

அமைச்சர்களும், முதலமைச்சரும் கோட்டைக்குள்ளும், வீட்டிற்குள்ளும் முடங்கிக் கிடந்த போது முதன்முதலில் களத்திற்குச் சென்று பணியாற்றியது அடியேன்தான்! அரசாங்கமே தூங்கிக் கொண்டிருந்தபோது, கொரோனா அச்சத்தில் முடங்கிக் கிடந்த போது, “ஒன்றிணைவோம் வா” என்று கூறி - ஊர் ஊராக - வார்டு வார்டாக - மாவட்டம் மாவட்டமாகச் சென்றது கழகத் தொண்டர்களாகிய நீங்கள்தான்! கொரோனா காலத்தில் நாம் செய்த மருத்துவ உதவிகளை, உணவு விநியோகத்தை, அத்தியாவசியப் பொருட்கள் கொடுத்ததை இந்தியாவில் எந்தக் கட்சியும் செய்திருக்க முடியாது. அந்த அளவிற்கு கொரோனா காலத்திலும் மக்களுக்கு நேரடியாகப் பணியாற்றிய கட்சி தி.மு.க.! இன்று தமிழ்நாட்டில் அரசு பணத்தைக் கொள்ளையடிக்கின்ற ஆட்சி நடைபெறுகிறது. அமைச்சர்கள் மட்டுமல்ல; அவர்களுக்கு எல்லாம் தலைவராக இருக்கும் முதலமைச்சர் பழனிசாமி என அனைவருமே அரசு பணத்தைச் சுருட்டுவதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

தினமும் முதலீடு, முதலீடு என்று விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் வந்த முதலீடுகள் எவ்வளவு என்று கேட்டால் இதுவரை கணக்குச் சொல்ல முடியவில்லை. எத்தனை புதிய தொழிற்சாலைகள் என்று கேட்டால், விவரமே தெரியவில்லை. எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டால், அதற்கும் பதில் இல்லை.முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தோல்வி. இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு தோல்வி. முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் முதலீடுகளைப் பெறுவதற்காக போன வெளிநாட்டுப் பயணம் தோல்வி. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டார்கள் தொழிலதிபர்கள். ஆனால் அப்படிப் போட்டவர்கள், இவர்கள் கமிஷன் கேட்பதைப் புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால் உண்மையான தொழிலதிபர்கள் - உள்ளபடியே தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் பல தொழிலதிபர்கள் வெளி மாநிலங்களுக்குப் போனார்கள். தமிழகத்தின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. ஆகவே தொழிலதிபர்களைத் தொழில் தொடங்க விடாமல் விரட்டிய ஆட்சி எடப்பாடி பழனிசாமி ஆட்சி.

இன்றைக்கு நாடே விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராடிக் கொண்டிருக்கிறது. டிராக்டர்களுடன் விவசாயிகள் டெல்லியில் குவிந்து வருகிறார்கள். தமிழ்நாட்டிலேயே டிராக்டர்களுடன் மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். நாம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். வரும் 18ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும், நானும், நமது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றப் போராடுகிறோம். விவசாயிகளின் விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க வேண்டும் என்று போராடுகிறோம். விவசாயிகளின் இலவச மின்சாரம் தொடர வேண்டும் என்று போராடுகிறோம். விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள் என்று போராடுகிறோம். ஆனால் எடப்பாடி பழனிசாமி என்ன செய்கிறார்? விவசாயிகளைத் தீவிரவாதிகள் என்று கூறிய பா.ஜ.க.வை ஆதரிக்கிறார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிக்கிறார். விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய விரும்பும் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து நிற்கிறார். இவற்றுக்கெல்லாம் ஒரே காரணம் - எடப்பாடி பழனிசாமியின் ஊழல்! அவர் இந்த நான்கு ஆண்டுகளில் முதலமைச்சராகவும், அதற்கு முன்பு அமைச்சராகவும் சம்பாதித்த ஊழல் பணம். பா.ஜ.க.வை முறைத்தால், எந்த நேரத்தில் வருமான வரித்துறை ரெய்டு வரும், எந்த நேரத்தில் அமலாக்கத்துறை ரெய்டு வரும், எந்த நேரத்தில் சி.பி.ஐ. வழக்கு வரும் என்று தெரியாது. ஆகவே அரண்டு மிரண்டு தமிழகத்தின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. விவசாயிகளின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதுபோன்ற அ.தி.மு.க. அரசின் துரோகங்களை - அமைச்சர்களின் ஊழல்களைக் களத்திற்குக் கொண்டு போகும் காளையர்கள்தான் கழக நிர்வாகிகள் - கழகத் தொண்டர்கள்.

அந்த நம்பிக்கையில்தான், இன்றைக்கு அ.தி.மு.க.வின் ஊழலை ஊரெங்கும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறோம். சட்டமன்றத் தேர்தல் சிறப்புக் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கூட்டத்திலும் ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்களை மட்டுமல்ல - மக்களையும் சந்தித்து வருகிறேன். நேற்றைய தினம் செய்தியைப் பார்த்திருப்பீர்கள். கழகத்தின் “தமிழகம் மீட்போம்” என்ற தேர்தல் சிறப்புக் கூட்டத்தை ஒரு கோடிப் பேர் பார்த்திருக்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் - தி.மு.க.வுடன் சேர்ந்து தமிழகத்தை மீட்க மக்கள் தயாராகி விட்டார்கள். அந்தப் பணியில் நான் தொடர்ந்து அயராது உழைக்க வேண்டும்! தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளரையும் நாம் பார்க்க வேண்டும். அ.தி.மு.க. அரசின் ஊழல்களை – எடப்பாடி பழனிசாமி அவர்களின் தோல்விகளை - பா.ஜ.க. தமிழகத்திற்குச் செய்துள்ள பச்சைத் துரோகத்தைப் பட்டியலிடுங்கள்! ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவருக்கு வேலை கிடைக்க, ஒவ்வொரு வீட்டிலும் வருமானம் பெருக, ஒவ்வொரு மாவட்டமும் தொழில் வளர்ச்சியில் ஒன்றையொன்று மிஞ்சிச் செல்ல - அ.தி.மு.க. ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவோம். நம் தமிழகத்தை மீட்போம்! இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

You'r reading ரெய்டுகளுக்கு அரண்டு தமிழக உரிமைகளை அடகு வைக்கும் எடப்பாடி.. மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை