புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டிணம் விசைப்படகு மீனவர்கள் நான்கு பேரை இலங்கைக் கடற்ப்படையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டிணம் மீன்பிடித் துறை முகத்திலிருந்து கடந்த சனிக்கிழமை காலை 271 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்திய எல்லைக் கடல் பகுதியான நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருருந்தபோது, அங்கே வந்த இலங்கைக் கடற்ப்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறிசிறை பிடித்தனர். கான்ஸ்டன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் அதில் சென்ற மீனவர்கள் ரமேஷ் (30), மோகன் (44) பாண்டு (50), கான்ஸ்டன்(42) ஆகிய நான்கு பேரையும் இலங்கைக் கடற்ப்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர். அவர்களை காங்கேசன்துறை முகத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்க கோரி தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் மீண்டும் கோட்டைப்பட்டிணம் மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரு நாட்டு மீனவர்களும் பரஸ்பரமாக மீன்பிடிக் வழிவகை செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.