கொச்சியில் மலையாள இளம் நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷம் செய்த வாலிபர்கள் அடையாளம் தெரிந்தது. தாங்கள் இருவரும் தெரியாமல் தவறு செய்து விட்டதாகவும் நடிகையிடமும், அவரது குடும்பத்தினரிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பிரபல மலையாள இளம் நடிகை அன்னா பென்னிடம் கொச்சியில் உள்ள வணிக வளாகத்தில் வைத்து 2 வாலிபர்கள் சில்மிஷத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அன்னா பென் போலீசில் புகார் செய்யாவிட்டாலும் கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். நடிகையின் தாயிடம் வாக்குமூலம் பெற்ற பின்னர் போலீசார் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
சம்பவம் நடந்த வணிக வளாகத்திற்கு சென்ற போலீசார் அங்கு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான கட்சிகளை பரிசோதித்த போது நடிகையிடம் 2 வாலிபர்கள் சில்மிஷம் செய்தது உறுதி செய்யப்பட்டது. வணிக வளாகத்திற்கு சென்ற அந்த இரு வாலிபர்களும் அங்கு பெயர் உட்பட எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. மேலும் அவர்கள் அங்கிருந்து எந்த பொருட்களும் வாங்கவில்லை. இதனால் வேறு ஏதாவது திட்டத்துடன் தான் இருவரும் வந்திருக்கலாம் என்பது உறுதியானது. இதையடுத்து இருவரையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து அவர்களது புகைப்படத்தை போலீசார் வெளியிட்டனர். போட்டோ வெளியான சிறிது நேரத்திலேயே அவர்கள் குறித்த விவரங்கள் தெரியவந்தன.
அவர்கள் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண்ணா பகுதியைச் சேர்ந்த ஆதில் மற்றும் இர்ஷாத் என கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து இருவரும் கூறியது: நாங்கள் வணிக வளாகத்திற்கு சென்ற போது நடிகை அங்கு பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார். அவர் நடிகை என எங்களுக்கு முதலில் தெரியாது. அந்த சமயத்தில் சிலர் அவருடன் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் அவர் நடிகை என எங்களுக்கு தெரியவந்தது. இதனால் அவரிடம் பேச நாங்கள் விரும்பினோம். அவரது அருகில் சென்று, எத்தனை படங்களில் நடித்தீர்கள், அடுத்து புதிய படம் எதும் ஒப்பந்தமாகி உள்ளதா? என்று கேட்டோம். இந்த சமயத்தில் அங்கு வந்த அந்த நடிகையின் சகோதரி, எங்களிடம் கோபத்துடன் பேசினார்.
இதன் பின்னர் நாங்கள் அங்கிருந்து சென்று விட்டோம். நடிகையை நாங்கள் பின் தொடர்ந்து தொந்தரவு ஏதும் செய்யவில்லை. வேண்டும் என்றே நாங்கள் அவரது உடலை தொடவில்லை. நடந்த சம்பவம் குறித்து நடிகையிடமும், அவரது தாயிடமும் மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறோம். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் எங்களை தேடுவதாக அறிந்ததால் நாங்கள் வக்கீலை அணுகினோம். அவர் தான் எங்களிடம் தலைமறைவாக இருக்கும்படி கூறினார். இதனால் தான் நாங்கள் தலைமறைவானோம். விரைவில் போலீசில் நாங்கள் சரணடைவோம் என்று கூறினர்.