திமுகவை வீழ்த்துவதற்காக சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்க வைக்கிறார்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மறைமுகமாக ரஜினியை குறிப்பிட்டு பேசினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று(டிச.20) நடைபெற்றது. இதில், மாவட்ட, நகர, பேரூர் நிர்வாகிகள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர். கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: வரும் 23ம் தேதி முதல் ஜன.10ம் தேதி வரை தமிழகம் முழுவதும் கிராமம், கிராமமாக 1600 திமுக நிர்வாகிகள் 14 ஆயிரம் கிராம சபைகளுக்கு சென்று பிரச்சாரம் செய்ய விருக்கிறார்கள். அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற தலைப்பில் குற்றப்பத்திரிகை வாசித்து கிராமசபைகளில் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தை காப்பதற்கு நாம் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். 234 தொகுதிகளையும் உங்கள் கரங்களில் வைக்கிறோம். நம்மால்தான் தமிழகத்தை வெல்ல முடியும். நம்மால்தான் தமிழகத்தை ஆள முடியும். நம்மால்தான் சிறப்பான திட்டங்களை கொண்டு வர முடியும். இதற்கு நமது சக்தியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். ஒரு கட்சி வெற்றி பெற 117 தொகுதிகளில் வென்றால் போதும். அதற்கு நாம் அதிக கஷ்டப்பட வேண்டியிருக்காது. ஆனால், நாம் 234 தொகுதிகளிலும் வெல்ல வேண்டும். அண்ணா மறைந்த பிறகு 1971ல் நடந்த தேர்தலில் 184 தொகுதிகளில் வென்றோம். அதே போல், 1996, 2004 தேர்தல்களில் நாம் பெற்ற மாபெரும் வெற்றியை விட 2019ம் ஆண்டு தேர்தலில் பெற்ற வெற்றி முழுமையான வெற்றி. அதை விட பெரிய வெற்றியை பெற வேண்டும். அதற்கு நமக்குள் உள்ள சிறுசிறு சங்கடங்களை ஒதுக்கி வைத்து விட்டு, எல்லா தொகுதியிலும் உதயசூரியனின் வேட்பாளர், கலைஞரின் வேட்பாளர் போட்டியிடுவதாக நினைத்து பாடுபட வேண்டும்.
நாம் வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்காமல் சுற்றியுள்ளவர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும். மத்தியில் ஆளும் பாஜகவின் அதிகார பலம், மாநிலத்தில் ஆளும் அதிமுகவின் பணபலம் ஆகிய இரண்டையும் எதிர்த்து நாம் போராட வேண்டும். அது மட்டுமல்ல. அனைத்து ஊடகங்களையும் பாஜக, அதிமுகவின் ஊதுகுழல்களாக மாற்றியிருக்கிறார்கள். இது நமக்கு புதிதல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் புதுசு, புதுசாக பல அஸ்திரங்களை நம் மீது வீசுவார்கள். இந்த முறை திமுகவை வீழ்த்துவதற்காகவே சிலரை கட்டாயப்படுத்தி கட்சி தொடங்கச் செய்கிறார்கள். (ரஜினி பாஜகவின் நிர்ப்பந்தத்தால் கட்சி தொடங்குகிறார் என்று மறைமுகமாக குறிப்பிடுகிறார்) இதை போல் எத்தனையோ சதிவேலைகள் நடைபெறும். இதையெல்லாம் பார்த்து நாம் சோர்ந்து விடக் கூடாது. அர்ஜூனனுக்கு கிளியின் கழுத்து மட்டுமே தெரிந்தது. மரக் கிளையோ, வேறெதுவுமோ தெரியாது.
அதைப் போல நமக்கு வெற்றி மட்டுமே கண்ணுக்கு தெரிய வேண்டும். அர்ஜூனன் குறி தப்பாது. திமுக வச்ச குறியும் தப்பாது என்பதை நிரூபிக்க வேண்டும். கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் வெறும் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தோம். அதற்கு நம்மிடம் இருந்த மிதப்புதான் காரணம். இந்த முறை அப்படி இருக்கக் கூடாது. ஆளும்கட்சியினர் பணத்தை அள்ளி வீசுகிறார்கள் என்றெல்லாம் காரணம் சொல்லக் கூடாது. பணம் மட்டுமே தேர்தலை நிர்ணயித்து விடாது. பணமா, மக்கள் மனமா என்று பார்த்தால் மக்கள் மனம்தான் வெல்லும். அதை நாம் வெல்ல வேண்டும். இந்த தேர்தலில் அனைத்து அமைச்சர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்கான வியூகத்தை நாங்கள் அமைப்போம். ஆனால், நீங்களும் தனியாக அதற்கான வியூகங்களை அந்த தொகுதிகளில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.