திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற மக்கள் கிராம சபைக் கூட்டம் கோவை, தொண்டாமுத்தூரில் இன்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் எழுந்த பெண் ஒருவர், திமுக கொடியை மாட்டிக் கொண்டு, எதற்காகக் கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம், பரபரப்பு ஏற்பட்டது. ஸ்டாலின் முன்னிலையிலேயே திமுக தொண்டர்கள் சிலர் அந்த பெண்ணை தாக்க முயன்றனர். அவர்களை ஸ்டாலின் தடுத்து நிறுத்தினார். அப்போது, எனது கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் என அந்த பெண் மீண்டும் கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஸ்டாலின், உனக்குப் பதில் சொல்ல முடியாது. நீ அமைச்சர் வேலுமணி அனுப்பி வைத்த ஆள் என்பது தெரியும் என்றார்.அந்த பெண், திமுக எதையும் செய்யவில்லை. இப்போது மட்டும் கிராம சபைக் கூட்டம் நடத்துவது ஏன் என்றார். வெளியில் இருந்த திமுகவினர், அந்த பெண்ணையும், போலீசாரையும் தாக்கினர். இதில் போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.அந்த பெண்ணை திமுகவினர் தகாத வார்த்தைகளால் திட்டினர். இதன் பின்னர் ஸ்டாலின் பேசுகையில் திமுக கட்டுப்பாடு உள்ள இயக்கம்.
அந்த பெண்ணை கண்டுபிடித்து எந்த பிரச்சனையும் இல்லாமல் அனுப்பி வைத்திருக்கிறோம். வேலுமணி அவர்களே, இத்தோடு உங்கள் கொட்டத்தை நிறுத்தி கொள்ளுங்கள்.இது போன்று நாங்கள் செய்தால், நீங்கள் மட்டுமல்ல முதல்வர் கூட கூட்டம் நடத்த முடியாது. இது தான் மரியாதை. உங்களுக்கு . தைரியம் இருந்தால், அதிமுக எனச் சொல்லிவிட்டு வந்திருக்க வேண்டும்.இந்த கூட்டத்தைத் தடுக்க வேலுமணி முயற்சி செய்வது ஏற்கெனவே எனக்குத் தெரியும்.
ஒரு கூட்டத்தைத் தடுக்க நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால், எந்த கூட்டத்தையும் நடத்த விட மாட்டோம். என்று பேசினார்.இதனிடையே, ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண் பூங்கொடி என்பவர் எனத் தெரியவந்துள்ளது. அவரை போலீசார் பாதுகாப்புடன் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்றனர்.தொடர்ந்து, அவரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இது குறித்து தகவல் அறிந்த அதிமுகவினர், தொண்டாமுத்தூரில் சிறிது நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.