பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் கருணை இல்லாமல் தண்டிக்கப்படவேண்டும் என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட பல பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய விவகாரம் தமிழகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, பொள்ளாச்சியில் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக மாணவரணி பிரமுகர் உள்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு தரப்பினர் விமர்சனங்களும் வைத்து வருகின்றனர். இந்நிலையில், நடிகையும், பாஜக பொறுப்பாளருமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியில், தமிழகமோ, உ.பி.யோ அல்லது எந்தவொரு மாநிலமாக இருந்தாலும் ஒரு பெண் மீதான பாலியல் வன்கொடுமையை அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பார்க்க வேண்டும்.
குற்றவாளிகள் தண்டிக்கப்பட எந்த ஒரு கருணையும் காட்டாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையிலும் அல்லது உ.பி பாலியல் வன்கொடுமையிலும் ஒரு பெண்ணின் கண்ணியம் சூறையாடப்பட்டு வாழ்க்கை மீது பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.