ரஜினியை அரசியலுக்கு வரவழைக்க நிதிவசூல்? மன்ற நிர்வாகி எச்சரிக்கை..

by எஸ். எம். கணபதி, Jan 7, 2021, 09:45 AM IST

ரஜினி அரசியலுக்கு வர வேண்டுமென்று கட்டாயப்படுத்தும் போராட்டத்திற்காகச் சிலர் நிதி வசூல் செய்வதாகவும், அது மிகவும் வருந்தத்தக்கது என்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி கூறியுள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமென பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்பின்னர், கடந்த டிசம்பர் 31ம் தேதி கட்சி ஆரம்பிக்கும் நாள் குறித்து அறிவிக்கப் போவதாகவும், ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்தார்.

ஆனால், அண்ணாத்தே படப்பிடிப்புக்காக ஐதராபாத்துக்கு அவர் சென்றிருந்த போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என்று அறிவித்தார்.இதைத் தொடர்ந்து, அவரது ரசிகர்களும், பாஜக அனுதாபிகளும் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். சிலர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:ரஜினி ரசிகர் மன்றத்தினர், மக்கள் மன்றத்தினருக்கு வணக்கம். நமது தலைவர் தன்னுடைய உடல்நிலை குறித்தும் மருத்துவர்கள் ஆலோசனைகளை மீறி அரசியலுக்கு வந்தால் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் மூலம் தன்னை நம்பி வரும் மக்கள் துன்பப்படக்கூடாது என்ற நல்லெண்ணப்படியும்தான் அரசியலுக்கு வரமுடியாத சூழல் குறித்து நம் அன்புத் தலைவர் வெளிப்படையான தெளிவான அறிக்கை ஒன்றைக் கொடுத்திருந்தார்.

அதன் பின்பும் அவரை அரசியலுக்கு வருமாறு கட்டாயப்படுத்துவதற்காகப் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக சில ரசிகர்கள் பேசி வருவது அவரை மேலும் நோகடிக்கச் செய்யும் செயல். இந்தப் போராட்டத்திற்காக ஒரு சிலர் அதற்கான செலவுக்கென்று கூறி நிதி வசூல் செய்வதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் வருந்தத்தக்கது.நம் தலைவரின் மீது அன்பும் அவர் நலனில் அக்கறையும் கொண்ட நம் ரஜினி மக்கள் மன்றக் காவலர்களும் ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.இவ்வாறு வி.எம்.சுதாகர் கூறியுள்ளார்.

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்