ஜெயலலிதா செய்த மிகப் பெரிய தவறு எடப்பாடி பழனிசாமிக்குத் தெரியுமா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.திமுக சிறுபான்மையினர் அணி சார்பாக நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.
இதில், திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:சிறுபான்மையினருக்குத் துரோகம் செய்த அரசுதான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அரணாக இருப்போம் என்று பேசியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலே பாஜகவும் அ.தி.மு.க.வும்தான்.என்னென்னவோ வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தது பாஜக. ஆனால் அதில் எதையும் நிறைவேற்றவில்லை.
ஆனால் சொல்லாத பல விஷயங்களைச் செய்து வருகிறார்கள். இந்திய அரசாங்கத்தையே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கும் அரசாக மாறிக்கொண்டிருக்கிறது பாஜக அரசு. பாஜக அரசுக்கு ஜனநாயகத்தைப் பற்றியோ, சமத்துவம் பற்றியோ, சகோதரத்துவம் பற்றியோ, மதநல்லிணக்கம் பற்றியோ கவலை இல்லை. இத்தகைய பாஜக அரசுக்குத் தலையாட்டும் பொம்மை அரசாக இருக்கிறது அ.தி.மு.க. அரசு! காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீர்மானம், குடியுரிமைத் திருத்தச் சட்டம், முத்தலாக் சட்டம் ஆகியவற்றை அ.தி.மு.க. ஆதரித்தது. இதை விடச் சிறுபான்மையினருக்குச் செய்யக்கூடிய வேறு துரோகம் செய்ய முடியுமா? 'காஷ்மீருக்கான சிறப்புரிமையை ரத்து செய்வதை எதற்காக ஆதரித்தீர்கள்?'' என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைக் கேட்டால், அவர் இதுதான் ஜெயலலிதாவின் கொள்கை, அவரது கனவு இது என்று பதில் சொன்னார்.
கடந்த 1999 ம் ஆண்டு சென்னை கடற்கரையில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதா பேசிய போது, 'என் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்தது தான். அதற்காகப் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இனி பாஜகவுடன் கூட்டணி வைக்கவே மாட்டேன் என்று சொன்னார். இது பழனிசாமிக்குத் தெரியுமா? ஜெயலலிதாவின் இந்தக் கனவை பழனிசாமி காப்பாற்றுவாரா நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடை மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. அதை ஆதரித்து நாடாளுமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் பேசியிருக்கிறார். இத்தகைய அ.தி.மு.க.வுக்கு சிறுபான்மையினரைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை.
மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் குடியுரிமைச் சட்டமானது சிறுபான்மையினரையும், ஈழத்தமிழர்களையும் மட்டுமல்ல இங்குள்ள தமிழர்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தப்போகும் சட்டம் ஆகும். அதனால் தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்த்தோம். மாபெரும் போராட்டங்களை நடத்தினோம். மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தினோம். கோடிக்கணக்கான கையெழுத்துக்களுடன் குடியரசுத் தலைவரையே சந்தித்தோம். மக்களவையில் பா.ஜ.க.,வுக்கு அறுதிப்பெரும்பான்மை இருப்பதால் அந்தச் சட்டம் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேறியதற்குக் காரணம், அ.தி.மு.க. அளித்த 11 வாக்குகள், அவர்களோடு சேர்ந்து அன்புமணி அளித்த ஒரு வாக்கு. இந்த 12 வாக்குகளும் சேர்ந்து அந்தத் துரோகச் சட்டம் நிறைவேறக் காரணம் ஆனது.
அந்த சட்டத்தால் யாருமே பாதிக்கப்படவில்லையே என்று ஏதோ தீர்க்கதரிசி போலப் பேசினார் முதலமைச்சர். அந்த சட்டம் அமலுக்கு வந்து கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால் பலரும் குடியுரிமை இழப்பார்கள். இந்த நடைமுறை கூடத் தெரியாமல், கேட்ட பழனிசாமிக்குச் சிறுபான்மையினரைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை! இது சிறுபான்மையினருக்கும், தமிழருக்கும் சேர்த்துச் செய்யப்பட்ட இரட்டைத் துரோகம்! இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இரண்டு திருத்தங்களைச் செய்ய மாநிலங்கள் அவையில் நமது உறுப்பினர் திருச்சி சிவா அவர்கள் கொடுத்தார்கள். பிற மதத்தவரைப் போல இசுலாமியர்களையும் இணைக்க வேண்டும், நாடுகள் வரிசையில் இலங்கை நாட்டை இணைக்க வேண்டும் என்பது தான் அந்த இரண்டு திருத்தங்கள். அந்த திருத்தங்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது தோற்கடிக்கப்பட்டது. தோற்கடித்த வாக்குகள் யாருடைய வாக்குகள்? அ.தி.மு.க.வின் 11 வாக்குகள், பாமகவின் ஒரு வாக்கு.
அதாவது இஸ்லாமியர் பெயரையும், ஈழத்தமிழர் பெயரையும் சேர்க்க வேண்டும் என்பதற்கு எதிராக வாக்களித்தவர்கள் அ.தி.மு.க.வும் பாமகவும்தான். இதைத்தான் தமிழினத் துரோகம் என்று சொல்கிறேன். இப்படிப்பட்ட துரோக அரசுதான் எடப்பாடி பழனிசாமியின் அரசு! நீங்கள் எல்லாம் ஒரு முடிவெடுத்துவிட்டு வந்திருக்கிறீர்கள். முடிவெடுத்து விட்டு வந்திருப்பவர்களிடம் அதிகம் சொல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேடையில் இருக்கக்கூடிய எங்களை எல்லாம் விட உங்களுக்குத்தான், இந்த ஆட்சியை மாற்றவேண்டும் என்ற ஆர்வமும், மாறும் என்ற நம்பிக்கையும் அதிகம் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதன்படி நாம் வெற்றி பெற அனைவரும் ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.