தேர்தல் வரவிருக்கும் நிலையில் தமிழகத்தில் கவர்னர் மாற்றப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்துக்கு தற்போது கவர்னராக உள்ள பன்வாரிலால் புரோஹித் வரையில் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக இவரது நடவடிக்கைகள் சரியாக இல்லை என ஆளும் அதிமுகவை தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் குற்றம்சாட்டி வந்தன. மருத்துவக் கல்லூரியில் பயில அரசு பள்ளிகளில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த உத்தரவை வெளியிடுவதில் காலதாமதம் செய்தது.
7 பேர் விடுதலை தொடர்பாக முடிவு எடுக்காமல் நீடித்தது என்பது போன்ற சர்ச்சைகளில் புரோஹித் சிக்கினார். இந்தச் சூழ்நிலையில் தமிழகத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் மத்திய அரசு தமிழக கவர்னரை மாற்ற முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கிருஷ்ணம் ராஜு நியமிக்கப்பட உள்ளார் என்றும் அரசு வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
கிருஷ்ணம் ராஜு தெலுங்கு திரைப்பட உலகில் பிரபலமான நடிகராக இருந்தவர். 183 க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களில் நடித்தார் . டோலிவுட்டில் 1970 மற்றும் 1980 களில் ஒரு சூப்பர் நடிகராக இருந்தவர். 1990 ல் அவர் அரசியலில் தீவிரமானார். பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்த அவர் நரசாபூரிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1999 முதல் 2004 வரை மூன்றாம் வாஜ்பாய் அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றி உள்ளார்.