சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தரின் பதவிக் காலம் நேற்றுடன் முடிவடைந்தது. புதிய துணைவேந்தரை நியமிக்கக் குழு அமைக்கப்பட்ட நிலையில் தமிழக ஆளுநர் குழந்தைவேலுவின் பதவிக் காலத்தை நீடித்து உத்தரவிட்டுள்ளார் இது பல்கலை வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
துணைவேந்தர் குழந்தைவேலுவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், தமிழக அரசு
உயர் கல்வித்துறை செயலாளர் அபூர்வா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் பாலகுருநாதன், அருணாச்சலம் ஆகிய மூவர் கொண்ட குழுவினை துணைவேந்தர் பொறுப்பு குழு என நியமித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், துணை வேந்தர் குழந்தை வேலுவின் பதவிக்காலம் திடீரென நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராகக் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவர் குழந்தைவேலு. இவரின் பதவிக் காலம் நிறைவடைந்ததையடுத்து, இவருக்கு பல்வேறு அமைப்பின் சார்பில் நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.இந்த நிலையில், பல்கலைக்கழக விதிகளுக்கு எதிராக கார்னர், குழந்தைவேலுவின் பதவியை நீட்டித்து உத்தரவிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிண்டிகேட் குழு கூடி முடிவு எடுத்த பின்னர், அதனை மாற்ற கவர்னருக்கு அதிகாரம் இல்லை என்று கூறப்படும் நிலையில் துணை வேந்தர் குழந்தைவேலு பாஜகவுக்கு ஆதரவான நபர் என்பதால் அவரின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இது போன்று புதிய பொறுப்பு குழு நியமிக்கப்பட்ட பின்னர் துணை வேந்தரின் பதவிக் காலத்தை நீடித்திருப்பது இதுவே முதல்முறையாகும்.தமிழக உயர் கல்வித்துறை செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுத்த முடிவு தமிழக அரசின் முடிவாகவே கருதப்படும். அப்படி இருக்கத் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக ஆளுநர் செயல்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.