சிட்னியில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா 338 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நேற்று சிட்னியில் தொடங்கியது. டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக புக்கோவ்ஸ்கியும், வார்னரும் களமிறங்கினர். தொடக்கத்திலேயே ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 5 ரன்கள் எடுத்திருந்த வார்னரை சிராஜ் ஆட்டமிழக்கச் செய்தார். 7 ஓவர் நிறைவடைந்த போது மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதன் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. நேற்று ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்திருந்தது. லபுஷேன் 67 ரன்களுடனும், ஸ்மித் 31 ரன்களுடனும் ஆட்டமிழக்காமலிருந்தனர். புக்கோவ்ஸ்கி 65 ரன்களில் செய்னியின் பந்தில் ஆட்டமிழந்தார். நேற்று இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. ஏராளமான கேட்சுகளையும், ரன் அவுட் வாய்ப்புகளையும் தவற விட்டனர். மழை காரணமாக நேற்று 55 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன.
இந்நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்று இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. குறிப்பாக ரவீந்திர ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் மிகச் சிறப்பாக பந்து வீசினர். இதன் காரணமாக ஆஸ்திரேலியா 338 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஸ்மித் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 131 ரன்களில் ரன் அவுட் ஆனார். ஜடேஜா 18 ஓவர்கள் வீசி 62 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். பும்ரா 2 விக்கெட்டுகளையும், செய்னி 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். தொடர்ந்து இந்தியா தன்னுடைய முதல் இன்னிங்சை விளையாடத் தொடங்கியது. ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். 6 ஓவர் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்துள்ளது. சுப்மான் கில் 14 ரன்களுடனும், ரோகித் சர்மா 11 ரன்களுடனும் ஆடிக் கொண்டிருக்கின்றனர்.