சென்னை - சேலம் எட்டு வழிச்சாலையை எதிர்த்து மறு ஆய்வு மனு.. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்..

by எஸ். எம். கணபதி, Jan 8, 2021, 11:59 AM IST

சென்னை -சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னை-சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழிச் சாலை(பசுமை வழிச்சாலை) அமைக்கும் திட்டத்துக்காகக் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு நில உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மற்றும் அன்புமணி ராமதாஸ், வக்கீல் சூரியபிரகாசம் உள்படப் பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடுத்தனர்.

வழக்குகளை விசாரித்த ஐகோர்ட், கடந்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி தீர்ப்பு அளித்தது. தமிழக அரசு பிறப்பித்த ஆணையை ரத்து செய்தும், இந்த திட்டத்துக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை 8 வாரத்துக்குள் திரும்ப ஒப்படைக்கவும் ஐகேகார்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறி, ஐகோர்ட் தீர்ப்பை ரத்து செய்தது.

இந்நிலையில், எட்டு வழிச்சாலை திட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தற்போது மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சேலம் அயோத்தியா பட்டினத்தைச் சேர்ந்த யுவராஜ் என்பவர் இந்த மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே சென்னை- சேலம் இடையே உள்ள 3 நெடுஞ்சாலைகளில் ஏதாவது ஒரு நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யலாம் என்றும், விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தும் அவசியம் இல்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

You'r reading சென்னை - சேலம் எட்டு வழிச்சாலையை எதிர்த்து மறு ஆய்வு மனு.. சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை