22 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் சரிவு..

by எஸ். எம். கணபதி, Jan 10, 2021, 09:21 AM IST

தமிழகத்தில் பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிக்கப்படவில்லை. சீனாவில் இருந்து பல நாடுகளுக்கு பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடியே 5 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகமானோருக்கு நோய் பாதித்தது. தமிழ்நாட்டில் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா தொற்று நோய் வேகமாக பரவியது. அக்டோபர் மாதத்திற்கு பிறகு தொற்று பரவல் குறையத் தொடங்கியது.

தற்போது வரை மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 60 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசு நேற்று(ஜன.9) வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று 65 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்பட்டதில், புதிதாக 761 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இவர்களை சேர்த்து, மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 25,537 ஆக உயர்ந்தது. மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆன 882 பேரையும் சேர்த்து, இது வரை 8 லட்சத்து 6018 பேர் குணம் அடைந்துள்ளனர்.

நோய் பாதிப்பால் நேற்று 7 பேர் பலியானார்கள். இதையடுத்து, பலியானவர்களின் எண்ணிக்கை 12,215 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7304 பேர் சிகிச்சையில் உள்ளார்கள். சென்னை(218பேர்), கோவை(69பேர்), சேலம்(52) மாவட்டங்களில் மட்டும் நேற்று புதிதாக 50க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று பாதித்திருக்கிறது. அரியலூர், கடலூர், திண்டுக்கல், கரூர் உள்பட 22 மாவட்டங்களில் புதிதாக தொற்று பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை 10க்கும் கீழ் குறைந்துள்ளது. பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிக்கப்படவில்லை.

You'r reading 22 மாவட்டங்களில் புதிய கொரோனா பாதிப்பு 10க்கும் கீழ் சரிவு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை