அதிமுக பொதுக்குழுவில் ஸ்டாலினை கண்டித்து தீர்மானம்..

by எஸ். எம். கணபதி, Jan 10, 2021, 09:34 AM IST

முதல்வரை விமர்சிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கண்டித்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் சுமார் 3500 பேர் வந்திருந்தனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காலை 11 மணிக்கு வந்தார். அதன்பிறகு இணை ஒருங்கிணைப்பாளரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தார். சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரை ராகுகாலம் என்பதால், காலை 8.50 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு, ராகுகாலம் முடிந்தவுடன் ஆரம்பிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, காலை 11.10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் வளர்மதி வரவேற்றார். முதலில் அதிமுகவினர் 115 பேர் மறைவுக்கும், முக்கிய பிரமுகர்கள் 9 பேர் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு: வரும் தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதை ஏகமனதாக ஏற்போம். வெற்றிக்கு கடுமையாக உழைப்போம். கொரோனா தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்ற, அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தமைக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு சுயநிர்ணய உரிமைகளை வழங்க, இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட மாகாண கவுன்சில் (மாகாண சபைகள்) முறை ரத்து செய்யப்படுவதைத் தடுக்க, இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்படுகிறது. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணியில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படுவதை முறைப்படுத்தி, அரசிதழில் வெளியிட்டமைக்கு, தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா - 2020 தங்க விருதினையும், கோவில் மேலாண்மை திட்டத்திற்கு எடுத்துக்காட்டான மென்பொருள் தயாரித்தமைக்கு வெள்ளி விருதினையும் பெற்றிருக்கும் அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. உலக முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்த்து, தொழில் வளர்ச்சிக்கு ஊக்கமளித்த அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக் என்ற மருத்துவ மையங்களைத் திறக்க நடவடிக்கை எடுத்திருக்கும் அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. ஏழை, எளியோருக்கு வீடு கட்டித்தரும் வகையில், நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தில் பயனடையும் 6 மாநிலங்களில் ஒன்றாக, தமிழகத்தை இணைத்திட்ட பிரதமருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடமளிக்கப்படும் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்றிட, சுழல்நிதி ஏற்படுத்தி இருக்கும் அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. நிவர் மற்றும் புரெவி புயல்களால் பாதிப்புகளுக்கு உள்ளான.

தமிழ்நாடு விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் அளித்திருக்கும் அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பும், ரூ.2,500 ரொக்கமும் வழங்கும் அரசுக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. பக்குவமோ, பண்பாடோ இன்றி முதல்வரை விமர்சித்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அவருடய கட்சியினருக்கும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. தேர்தலுக்கான வியூகம் வகுக்கவும், கூட்டணி கட்சிகளையும், தொகுதி பங்கீட்டையும் முடிவு செய்யவும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முழு அதிகாரம் வழங்கப்படுகிறது. அ.தி.மு.க.வில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு் குழுவுக்கு ஒப்புதலும், அங்கீகாரமும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

You'r reading அதிமுக பொதுக்குழுவில் ஸ்டாலினை கண்டித்து தீர்மானம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை