ஓ.பி.எஸ்சுடன் சமரசம்.. இ.பி.எஸ் முயற்சி பலிக்குமா? அதிமுகவில் உச்சகட்ட பனிப்போர்..

by எஸ். எம். கணபதி, Jan 10, 2021, 09:38 AM IST

அதிமுகவில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மோதல் மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஓ.பி.எஸ்.சை சமதானப்படுத்த பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி(இ.பி.எஸ்) எடுத்த முயற்சிகள் பலனளிக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. அதிமுக 2 ஆக பிளவுபட்டு, ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் மீண்டும் இணைந்த பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தன. கட்சியில் கொஞ்சம், கொஞ்சமாக ஓ.பி.எஸ் ஆதரவாளர்களையும் தன் பக்கமாக இ.பி.எஸ் வளைத்தார். அது மட்டுமல்ல, துணை முதல்வர் ஓ.பி.எஸ். மாவட்டமான தேனி மாவட்டத்தைத் தவிர மற்ற எல்லா மாவட்டங்களுக்கும் அரசு விழா என்ற பெயரில் சென்று அதிமுக முக்கிய நிர்வாகிகளை வளைத்தார். அதன்பிறகு, 2021ம் ஆண்டு தேர்தலிலும் தானே அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் என்று கட்சியில் அறிவிக்க ஏற்பாடு செய்தார்.

ஆனால், அந்த இடத்தில் தனது பிடியை இறுக்கினார் ஓ.பி.எஸ். முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்க முடியாது. அணிகள் இணையும் போது அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை என்று எகிறினார். 10 அமைச்சர்கள் இருவரையும் மாறி, மாறி சந்தித்து சமரசம் செய்தனர். கடைசியில், கட்சியை வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைத்தால் முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை ஏற்றுக் கொள்வதாக ஓ.பி.எஸ் அறிவித்தார். அதாவது, கட்சியில் எடப்பாடியே ஏக தலைமை ஆக முடியாமல் தடுக்கும் விதமாக வழிகாட்டுதல் குழு மூலம் செக் வைத்தார். வேறு வழியில்லாமல் எடப்பாடி அதை ஏற்றுக் கொண்டு, குழுவை அமைத்தார். ஆனால், அதன்பின்னரும் ஓ.பி.எஸ்.சை தனது அதிகார பலத்தால் ஓரங்கட்டத் தொடங்கினார். கட்சியின் நிர்வாகிகள் எல்லாரையும் தாராளமாக கவனித்து தன் பக்கம் திருப்பினார்.

ஜெயலலிதா போல் தன்னை மிகப் பெரிய ஆளுமை மிக்க தலைவராக காட்டும் வகையில் அரசு பணத்தை கோடிக்கணக்கில் செலவிட்டு, பத்திரிகைகளில் சாதனை விளம்பரங்களை வெளியிட்டார். அதில் ஜெயலலிதா படமும், தனது படமும் மட்டும் இடம் பெறச் செய்தார். அரசியலில் வாயே திறக்காமல் அமைதியாகவே சிக்சர், பவுன்டரி அடிக்கும் ஓ.பி.எஸ். மீண்டும் ஒரு செக் வைத்தார். அதாவது எடப்பாடி பழனிசாமி தனது தொகுதியில் பிரச்சாரத்தை ஆரவாரமாக தொடங்கிய போது, ஓ.பி.எஸ் அமைதியாக தேனி மாவட்டத்தில் 17 விழாக்களில் பங்கேற்றார். அம்மாவால் அடையாளம் காட்டப்பட்ட தலைவர், 10 முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த ஒரே நிதியமைச்சர் என்று தன்னை புகழ்ந்து தினமலர் பத்திரிகையில் முதல் 2 பக்கங்களில் விளம்பரம் கொடுத்தார். அதைக் கண்டு எடப்பாடி அசரவில்லை. தன் போக்கில் ஸ்டாலினை கடுமையாக திட்டி, சத்தம் போட்டு பேசிக் கொண்டே பெரிய தலைவராக தன்னை காட்டிக் கொண்டு வந்தார். ஓ.பி.எஸ் அடுத்த காய் நகர்த்தினார்.

ரூ.34 லட்சம் செலவிட்டு தினமலர் நாளிதழின் அனைத்து பதிப்புகளிலும் தன்னை ஜெயலலிதா அடையாளம் காட்டிய தலைவராக விளம்பரப்படுத்தினார். இது எடப்பாடிக்கு அச்சத்தை ஏற்படுத்தியது. பாஜக கட்சிதான், ஓ.பி.எஸ்சை வைத்து அதிமுகவை உடைத்து தன்னை பதம் பார்க்க முயல்கிறது என்று பயந்தார். அதனால், ஓ.பி.எஸ்சை சமாதானப்படுத்த முன்வந்தார். இந்த சூழலில்தான், அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று(ஜன.9) நடைபெற்றது. இதில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் காலை 11 மணிக்கு வந்தனர். சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10.30 மணி வரை ராகுகாலம் என்பதால், அது முடிந்து காலை 11.10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு கோடானு கோடி நன்றி தெரிவித்தார்.

மேலும், அவர் பேசுகையில், நான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் ஆளுமைமிக்க தலைவர் அல்ல. ஆனாலும், 4 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை அளித்துள்ளேன் என்று கூறினார். அதே போல், பொதுக்குழுவில் நிறைவேற்ற 16 தீர்மானங்கள் தயாரிக்கப்பட்டு, அதன் நகல் பத்திரிகையாளர்களுக்கும் அளிக்கப்பட்டது. ஆனால், கடைசியாக 16ஏ என்றொரு தீர்மானத்தை வைகை செல்வன் எழுதி கொண்டு வந்து வாசித்தார். அதில், 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவிற்கு பொதுக்குழு ஒப்புதலும், அங்கீகாரமும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இவை எல்லாம் ஓ.பன்னீர்செல்வத்தை சமாதானப்படுத்த எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட முயற்சிகளாக அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனாலும், ஓ.பி.எஸ் அடங்குவதாக தெரியவில்லை. பொதுக்குழுவில் அவர் பேசும்போது, இங்கு(அதிமுகவில்) யாரும் யாருக்கும் அடிமை இல்லை என்று சொடக்கு போட்டார்.

அத்துடன் நிற்கவில்லை... இன்று(ஜன.10) காலை தமிழ்நாட்டின் முன்னணி நாளிதழான தினத்தந்தியில் முதல் 2 பக்கங்களில் முழுபக்க விளம்பரத்தை ஓ.பி.எஸ் கொடுத்துள்ளார். அதில் ஓ.பி.எஸ்.தான் அதிமுகவின் ஆளுமை என்பது போல் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதில், இந்திய வரலாற்றிலேயே தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த ஒரே நிதியமைச்சர்.. என்று ஓ.பி.எஸ்சை புகழ்ந்துள்ளனர். மேலும் அதில், ஆட்சிக்கு மட்டுமல்ல, கட்சிக்கும் ஓ.பி.எஸ்சை பொருளாளராக்கி, மாநிலத்தின் கஜானா பெட்டியின் கைச்சாவியோடு அதிமுகவின் பொருளாதார நிர்வாகத்தையும் ஓ.பி.எஸ் கரங்களிலேயேயே ஒப்படைத்தததன் மூலம் நேர்மைக்கும், கண்ணியத்திற்கும், நிதிநிர்வாக திறமைக்கும் பெயர் பெற்றவர் ஓ.பி.எஸ் என்பதை உலகத்திற்கு உணர்த்தி சென்றிருக்கிறார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஓ.பி.எஸ்சின் இந்த அடுத்த அஸ்திரத்திற்கு எடப்பாடி என்ன செய்யக் காத்திருக்கிறாரோ?

You'r reading ஓ.பி.எஸ்சுடன் சமரசம்.. இ.பி.எஸ் முயற்சி பலிக்குமா? அதிமுகவில் உச்சகட்ட பனிப்போர்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை