சசிகலாவை மீண்டும் ஆதரிப்பதா, ஒதுக்குவதா? அதிமுகவில் மீண்டும் குழப்பம்..

by எஸ். எம். கணபதி, Jan 13, 2021, 14:10 PM IST

என்னை முதலமைச்சர் ஆக்கியது சசிகலா அல்ல என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். அதே சமயம், சசிகலா தவவாழ்வு வாழ்ந்தவர் என்று கோகுல இந்திரா புகழ்ந்திருக்கிறார். இதனால், அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் சசிகலா தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசியதாகக் கூறி, அதைக் கண்டித்து அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மற்றும் அதிமுக, பாஜக மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் பிரச்னை எழுந்து 4 நாள் கழித்து இன்று(ஜன.13) காலையில், சென்னை அரும்பாக்கத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து அவர் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதன்பின், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் சசிகலா. அவர் எங்கே இருந்தாலும் எங்களால் என்றைக்கும் மரியாதைக்கு உரியவராக போற்றக்கூடியவர். அம்மாவோடு(ஜெயலலிதா) தவவாழ்வு வாழ்ந்தவர் சசிகலா. எனவே, அவரை இழிவுபடுத்துவதை ஏற்க முடியாது. ஒரு பெண்ணை இழிவுபடுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தெரிவித்தார். இது தொடர்பாக, அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தியிடம் கேட்ட போது, ஒரு பெண்ணை இழிவுபடுத்தி உதயநிதி பேசியதற்காக கோகுலா அப்படி பேட்டி கொடுத்திருப்பார். மற்றபடி அம்மாவோடு தவவாழ்வு வாழ்ந்தவர் என்றெல்லாம் சசிகலாவை இப்போது திடீரென புகழ்வது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

காலங்கடந்து இப்போதுதான் அது அவருக்கு தெரிகிறதா? அவர் பேட்டியளித்ததன் காரணம் எனக்கு புரியவில்லை என்றார். முன்னதாக, இன்று காலை வெளியான தி இந்து ஆங்கில நாளிதழில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர் தன்னை முதலமைச்சராக தேர்வு செய்தது சசிகலா அல்ல என்றும், அதிமுகவில் நீண்டகாலம் விசுவாசமாக பணியாற்றியதை மதித்து, அதிமுகவின் எம்.எல்.ஏ.க்கள்தான் தன்னை முதலமைச்சராக தேர்வு செய்தனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். கடந்த 2 ஆண்டுகளாக சசிகலா பற்றி எதுவுமே வாய் திறக்காமல் மவுனம் காத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சமீபத்தில்தான் ஒரு கருத்தைச் சொன்னார்.

அதாவது, சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்தாலும் அதிமுகவில் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறியிருந்தார். அதன் தொடர்ச்சியாக, தன்னை முதலமைச்சராக தேர்வு செய்தது சசிகலா அல்ல என்றும் ஓங்கிச் சொல்லியிருக்கிறார். இந்த சூழ்நிலையில், கோகுல இந்திரா திடீரென சசிகலாவுக்காக ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தியதும், தவவாழ்வு வாழ்ந்தவர் என்று புகழ்ந்ததும் அதிமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. காரணம், கோகுல இந்திரா நிச்சயமாக முதலமைச்சருக்கு தெரியாமல் இப்படி கூறியிருக்க மாட்டார் என்று கட்சியினர் கருதுகிறார்கள். அதனால், சசிகலாவை ஆதரிக்க வேண்டுமா அல்லது சசிகலா குடும்பத்தினரை, ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்த கட்சி... என்று வழக்கம் போல் திட்டி தீர்க்க வேண்டுமா என்பது புரியாமல் அதிமுக நிர்வாகிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

You'r reading சசிகலாவை மீண்டும் ஆதரிப்பதா, ஒதுக்குவதா? அதிமுகவில் மீண்டும் குழப்பம்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை