கைதிகளுக்கும் வந்தாச்சு மாடர்ன் டிரஸ் டி-ஷர்ட், பர்முடா கேரளாவில் அறிமுகம்

by Nishanth, Jan 13, 2021, 14:25 PM IST

கேரளாவில் சிறைக் கைதிகளுக்கு டி-ஷர்ட், பர்முடா போன்ற மாடர்ன் உடைகளை அணிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறைகளில் கைதிகள் தாங்கள் அணியும் கைலி அல்லது வேட்டியை பயன்படுத்தி தூக்குப் போட்டு தற்கொலை செய்வது அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கைதிகளுக்கு சட்டை, டிரவுசர் ஆகிய சீருடை உள்ளபோதிலும் கைலி அல்லது வேட்டி அணியவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான கைதிகள் தங்கள் வசதிக்கு ஏற்ப கைலியோ அல்லது வேட்டியோ அணிந்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபகாலமாக கேரளாவில் சிறைகளில் கைதிகள் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தூக்கு போடுவதற்கு பெரும்பாலும் கைதிகள் தங்களுடைய கைலியைத் தான் பயன்படுத்துகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன் கோழிக்கோடு சிறையில் இதேபோல் ஒரு கைதி கழிப்பறையில் தன்னுடைய கைலியை பயன்படுத்தி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் கோழிக்கோடு சிறைக்கு சென்றிருந்தார். அப்போது கைதிகள் சிறைகளில் தூக்கு போடுவதை தடுக்க என்ன செய்வது என்பது குறித்து அவர் சிறைத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் தான் கைதிகளுக்கு கைலிக்கு பதிலாக டி-ஷர்ட் மற்றும் பர்முடா பயன்படுத்த அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த முடிவை உடனே அமல்படுத்த தீர்மானிக்கப்பட்டது. முதல்கட்டமாக விரைவில் கோழிக்கோட்டில் கைதிகளுக்கு இந்த மாடர்ன் டிரஸ் வழங்கப்பட உள்ளது. ஒரு தனியார் நிறுவனம் கைதிகளுக்கு இந்த உடைகளை வழங்க முன்வந்துள்ளது. மேலும் பல தனியார் நிறுவனத்தின் உதவியுடன் கேரளா முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்த தீர்மானித்திருப்பதாக சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் கூறினார்.

You'r reading கைதிகளுக்கும் வந்தாச்சு மாடர்ன் டிரஸ் டி-ஷர்ட், பர்முடா கேரளாவில் அறிமுகம் Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை