சட்டசபைத் தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு? மன்ற நிர்வாகி பரபரப்பு தகவல்..

by எஸ். எம். கணபதி, Jan 18, 2021, 12:05 PM IST

சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் எந்த கட்சிக்கும் ஆதரவாக வாய்ஸ் கொடுக்க மாட்டார் என்பதை அவரது மன்ற நிர்வாகி சூசகமாகத் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமெனப் பல ஆண்டுகளாக அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். கடைசியாக, அவர் கடந்தாண்டு டிசம்பர் 31ம் தேதி கட்சி ஆரம்பிக்கும் நாள் குறித்து அறிவிக்கப் போவதாகவும், ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். ஆனால், அண்ணாத்தே படப்பிடிப்புக்காக ஐதராபாத்துக்கு அவர் சென்றிருந்த போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதனால், அவர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரப் போவதில்லை என்று அறிவித்தார்.ஆனாலும் அவரது ரசிகர்களும், பாஜக ஆதரவாளர்களும் அவர் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டுமென்று கோரிக்கை விடுத்தனர். சிலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ரஜினி வெளியிட்ட அறிக்கையில், என் முடிவைக் கூறி விட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியலுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி, என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று கூறியிருந்தார்.

இதற்குப் பின்னர், ரஜினி மக்கள் மன்றத்தின் சில மாவட்டச் செயலாளர்கள் கடந்த 2 நாள் முன்பாக திமுகவில் இணைந்தனர். இந்த சூழலில், ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் இன்று(ஜன.18)வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜினாமா செய்து விட்டு, அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்து விடக் கூடாது.இவ்வாறு வி.எம்.சுதாகர் கூறியுள்ளார்.

இது பற்றி ர.ம.ம. பொறுப்பில் உள்ள ஒருவரிடம் நாம் பேசிய போது, ரஜினி தனது முடிவை அறிவித்த பிறகும் அவர் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பார் என்றும் தேர்தலில் வாய்ஸ் கொடுப்பார் என்றும் பலரும் பேசுகிறார்கள். அதை ரஜினி விரும்பவில்லை. ரசிகர்கள் அவர்களின் விருப்பம் போல் வாக்களிக்க வேண்டும் என்பதுதான் ரஜினியின் ஆசையாகும். அதைத் தெளிவுபடுத்தும் வகையில்தான் இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது என்று விளக்கம் கொடுத்தார். எனவே, சட்டமன்றத் தேர்தலில் ரஜினி எந்த கட்சிக்கும் வாய்ஸ் கொடுக்க மாட்டார் என்பது உறுதியாகி விட்டது.

You'r reading சட்டசபைத் தேர்தலில் ரஜினி ஆதரவு யாருக்கு? மன்ற நிர்வாகி பரபரப்பு தகவல்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை